சங்கு தீர்த்த குளத்தில் பாறைகள் அகற்றும் பணி துவக்கம்!
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தில் உள்ள, பாறைகளை அகற்றும் பணி, நேற்று துவங்கியது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் தெற்கே, 12 ஏக்கர் நிலப்பரப்பில் சங்கு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. இங்கு மார்க்கண்டேய முனிவர், சிவனை நோக்கி தவம் செய்தபோது, அவர் வழிபட, குளத்தில் சங்கு பிறந்ததாக ஐதீகம். அன்று முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கிறது. உப்பு நீரில் வாழக்கூடிய சங்கு, நன்னீரில் பிறப்பது அதிசயம். சிறப்புமிக்க இக்குளத்திற்கு, வேதகிரீஸ்வரர் மலையிலிருந்து நீர் வரும் வகையில், வரத்துக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தில் ஆண்டுதோறும் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். கடந்தாண்டு மழை பொய்த்து விட்டதால், நீர்வரத்து குறைந்து குளத்தில், போதிய அளவு நீர் நிரம்பவில்லை. கடந்த ஜனவரி 17ல் தெப்ப உற்சவம் நடைபெற்றபோது, தெப்பம் சுற்றி வருவதற்கு, குளத்தின் மேற்கு பகுதியில் உள்ள பாறைகள் இடையூறாக இருந்தன. குளம் வற்றியுள்ள இந்த நேரத்தில் பாறைகளை அகற்ற வேண்டும் என இந்து சமய அறநிலைய துறையிடம் பக்தர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அத்துறை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் அர்த்தஜாம குழுவினர், கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, குளத்தில் உள்ள பாறைகளை அகற்றும் பணியை நேற்று துவக்கினர்.