கெங்கையம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா!
உத்திரமேரூர் : பழவேரி கிராமத்தில், கெங்கையம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. பழவேரி கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா, கடந்த 8ம் தேதி, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த இரண்டு நாட்களாக, கிராமத்தில் உள்ள கெங்கையம்மன், முத்து மாரியம்மன், சக்தி விநாயகர் ஆகிய கோவில்களில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை, 10:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதிகளில் ஊர்வலமாக வந்தார். அப்போது, கெங்கையம்மனுக்கு தீபம் ஏற்றி, பக்தர்கள் வழிபட்டனர்.
தொடர்ந்து, மதியம், 1:00 மணிக்கு, கெங்கைஅம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இதேபோன்று, சாலவாக்கம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சொக்கம்மன் கோவிலில், நேற்று முன்தினம், ஆவணி மாத தேர்த்திருவிழா நடந்தது. காலையில் நடந்த சிறப்பு பூஜையை தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு, சொக்கம்மன், மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி, வீதிகளில் ஊர்வலமாக வந்தார். அப்போது, அம்மனுக்கு பிரார்த்தனை செய்திருந்த பக்தர்கள், உடலில் அலகு மற்றும் எலுமிச்சை பழங்களை குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். இவ்விழாவில், சாலவாக்கம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.