உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் விக்ரகங்களை பாதுகாத்திட ரூ.50.05 லட்சத்தில் புதிய கட்டிடம்

கோவில் விக்ரகங்களை பாதுகாத்திட ரூ.50.05 லட்சத்தில் புதிய கட்டிடம்

அரியலூர்: அரியலூரில் சைவ, வைணவ கோவில்களுக்கு சொந்தமான அனைத்து விக்ரகங்கள் பாதுகாப்பாக வைத்திட, 50.05 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அரிய கோவில்கள் பல அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அரியலூர், ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு, ஆஸ்திரேலியா நாட்டில் மீட்கப்பட்ட, 900 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலையை, அந்நாட்டு பிரதமர் இந்தியாவுக்கு வந்தபோது, பிரதமர் மோடியிடம் பரிசாக வழங்கியுள்ளார். இந்நிலையில், தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்பில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களின் விக்ரகங்களை பாதுகாப்பதற்கான, புதிய கட்டிடம் கட்ட முடிவுசெய்யப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சட்டசபை அறிவிப்பு பணி, ஐம்பது லட்சத்து, ஐந்தாயிரத்து, 767 ரூபாய் மதிப்பில் பணிகள் துவங்கப்பட்டது. அரியலூர் கோதண்டராமசாமி திருக்கோயில் நிர்வாக அலுவலர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் முடிந்த பின்னர், அரியலூர் மாவட்டத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து சைவ, வைணவ கோயில்களுக்கும் சொந்தமான தெய்வ திருமேனிகள், இந்த கட்டிடத்தில் வைத்து பாதுகாக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !