ஸ்ரீரங்கம் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இரண்டு நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று துவங்கியது. இதையொட்டி, நேற்று காலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், கருடமண்டபம் அருகே உள்ள ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். மதியம் திருமஞ்சனம். பொதுமக்கள் தரிசனத்துக்கு பிறகு மூலஸ்தானம் செல்கிறார். இன்று காலை, 7.15 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளிய பின், மாலை, 9 மணிக்கு கிருஷ்ணன் சன்னதி வருகிறார். மாலை, 3 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன், திருச்சிவிகையில் புறப்பட்டு அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள யாதவா உறியடி ஆஸ்தான மண்டபத்துக்கு செல்கிறார். சிறப்பு பூஜைகளுக்கு பின், நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து, இரவு தெற்கு வாசலில் உள் பாதாள கிருஷ்ணன் கோவில் அருகே உறியடி உற்சவத்தை நம்பெருமாள் உபயநாச்சியார்கள், கிருஷ்ணருடன் கண்டருளிய பின், இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் செல்கிறார். கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பக்தர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். விழாவை முன்னிட்டு, மூலவர் சேவை கிடையாது.