எனக்கு முக்கியம் அம்பாள் தான்!
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று அவ்வைப்பாட்டி சொல்லியிருக்கிறாள். இரண்டு முன்னறி தெய்வங்களிலும் முன்னதாக அன்னையைச் சொல்லியிருக்கிறாள். தைத்ரீயோபநிஷத் என்ற உபநிஷதத்தில், மாதாவைத் தெய்வமாகக் கொள்; பிதாவைத் தெய்வமாகக் கொள் என்று சொல்லப்பட்டுள்ளது.தாயாரைத் தெய்வமாக நினைக்க முடியுமானால் இதையே திருப்பி வைத்துப் பார்க்கும் போது தெய்வத்தைத் தாயாகப் பார்க்க முடியும். சர்வ லோகங்களையும் படைத்துக் காத்துக்கொண்டிருக்கிற மகாசக்தியைத் தாயாக நினைக்கும் போது, அவளை அம்பாள் என்கிறோம். எல்லாமாக ஆகியிருக்கிறபரமாத்மா, நாம் எப்படி நினைத்தாலும் அப்படி வந்து அருள் செய்கிறது. எந்தரூபமாகத் தியானித்தாலும் அந்த ரூபத்தில் வந்து அருள் செய்கிறது. சாக்ஷாத்பரப்பிரம்மமே தாயாகி, அம்பிகையாக இருந்து கொண்டு நமக்கு அருள் செய்ய வேண்டும் என்று நாம் பிரார்த்தித்தால் அவ்விதமே வருகிறது.பரமாத்மாவை, அன்னையாக பாவித்து வழிபடுவதில் தனியான விசேஷம் உண்டு. அம்மாவிடம் நமக்குள்ள அன்பும், அம்மாவுக்கு நம்மிடம் உள்ள அன்பும் அலாதியானவை அல்லவா? எனவே, அம்மா என்று நினைத்து பக்தி செய்வதால் ஒரே அன்பு மயமாக இருக்கிறது. நாம் குழந்தையாகி விடுவதால் தானாகவே காம, குரோதம் நம்மை விட்டுவிலகுகின்றன. வயசேறிப் போவதால் ஏற்படும் மன விகாரங்களை அவளுடைய குழந்தை என்ற உணர்வால் போக்கிக் கொள்கிறோம். இந்த ஜென்மத்தில் ஏற்பட்ட தாயையே தெய்வமாகவழிபட வேண்டுமானால், எந்தெந்த ஜென்மத்துக்கும் துணையாக இருக்கிறபரமாத்மாவையும் தாயாக வணங்கத் தானே வேண்டும்! பரமாத்மாவை அம்பிகையாகப் பூஜிப்பதால் அவள் ஒருத்தி தான் உலகின் அம்மா. நாம் எல்லோரும் அவளுக்குப் பிறந்த குழந்தைகள். அதாவது எல்லோரும், எல்லாமும் சகோதரர்கள் என்ற அனுபவம் உண்டாகும். லோக வாழ்வில் சாந்தி(அமைதி) வேண்டுமானால், அதற்கு ஒரே வழி அம்பாளைத் தியானிப்பது தான்.எனக்கு முக்கியம் அம்பாள் தான். அம்பாளின் சரணாரவிந்தத்தை(திருவடி) தான் எப்போதும் தியானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எல்லோரும் அம்பாளைத் தியானம் பண்ண வேண்டும். அதன் மூலம் அவளைப் போலவே, நாமும் அன்பே உருவமாகி உலகத்திற்கே ஆனந்தத்தைக் கொடுக்கலாம். (காஞ்சிப்பெரியவர்)