உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீட்டஞ்சேரியில் சீரழியும் கோவில் மண்டபம்!

சீட்டஞ்சேரியில் சீரழியும் கோவில் மண்டபம்!

உத்திரமேரூர்: சீட்டஞ்சேரி கிராமத்தில்,  சீரழிந்து வரும் கோவில் மண்டபத்தை பராமரித்து பாதுகாத்திட, அப்பகுதிவாசிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது, சீட்டஞ்சேரி கிராமம். ஒரு காலத்தில், இப்பகுதியில் கிருஷ்ணர்  வலம் வந்ததாகவும், அப்போது, இக்கிராமத்திற்கு கிருஷ்ணரால் நல்லாசி வழங்க பட்டுள்ளதாகவும் இப்பகுதிவாசிகள் நம்புகின்றனர்.  இதனால்,  இந்த கிராமத்திற்கு கிருஷ்ணபுரி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இப்பகுதியில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான, பழமை வாய்ந்த  காளீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.  இக்கோவிலுக்கு அருகில், கல் மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஓய் வெடுக்கவும், கோவில் தேர் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தவும் இந்த மண்டபம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில  ஆண்டுகளாக, இந்த மண்டபம் பராமரிப்பு இல்லாமல் சீரழிந்து வருகிறது. மண்டபத்தின் மேல் பகுதிகளில் ஆங்காங்கே மரக்கன்றுகள் வளர்ந்து,  அதன் வேர்கள் கட்டட சுவரில் புகுந்துள்ளது. இதனால், கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில்,  இந்த மண்டபத்தில் இப்பகுதி, குடி’மகன்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, பழமையான இந்த கல்  மண்டபத்தை சீரமைத்து, பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !