சவுடேஸ்வரியம்மன் கோவிலில் 108 மூலிகைகளுடன் மகா சண்டியாகம்!
குன்னூர் : குன்னூர் சவுடேஸ்வரியம்மன் கோவிலில் 108 மூலிகைகளுடன், மகா சண்டியாகம் நடந்தது. குன்னூர் மவுன்ட்ரோடு பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 24ம் தேதி துவங்கிய நவராத்திரி விழாவில், துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி ஹோமங்கள் நடத்தி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நவராத்திரி நிறைவையொட்டி, மகா சண்டியாகம் நடந்தது. இதில் 108 மூலிகைகள், நவ தானியங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் யாகத்தில் பயன்படுத்தப்பட்டன.மகிஷாசுர மர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. தொடர்ந்து தந்தி மாரியம்மன் கோவில் வரை முளைப்பாரி ஊர்வலம், கலச ஊர்வலம் நடத்தப்பட்டது. மாலையில், மகா அபிஷேகம் மகா தீபாராதனை, அலங்காரம் ஆகியவை நடந்தன. சிறப்பம்சமாக மகிஷாசுர மர்த்தினி வேடமணிந்த மாணவியரின் அம்பு சேவை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. பூஜைகளை குணாசாஸ்திரி மற்றும் குருக்கள் மேற்கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.