விஜயராகவ பெருமாள் கோவில் கொடிமரம் பழுது!
திருத்தணி : விஜயராகவ பெருமாள் கோவிலின், கொடி மரம் பழுதடைந்து எந்த நேரத்திலும், உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. திருத்தணி, நந்தி ஆற்றின்கரையோரம், கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது விஜயராகவ பெருமாள் கோவில். இக்கோவில், முருகன் கோவிலின் துணை கோவில் ஆகும்.இதன் அருகே, விஜயலட்சுமி தாயார் கோவிலும் உள்ளது. முருகன், பெருமாள் மற்றும் அம்மன் கோவில் ஒரே வளாகத்தில் உள்ளதால், தினமும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.புரட்டாசி மாதத்தில், விஜயராகவ பெருமாள் கோவிலுக்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்துவிட்டு, சர்க்கரை பொங்கல், சுண்டல் மற்றும் அன்னதானம் வழங்குவர். இந்நிலையில், விஜயராகவ பெருமாள் கோவிலின் நுழைவு வாயில் முன், பல ஆண்டுகளுக்கு முன், கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவில் நிர்வாகம் அதை முறையாக பராமரிக்காததால், தற்போது, கொடிமரம் பழுதடைந்து எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது.புதிய கொடி மரத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ’கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள மூன்று கோவில்களுக்கும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட இருக்கிறது. அதற்குள் கொடிமரம் சீரமைக்கப்படும். மேலும், ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, தற்போது துரித வேகத்தில் நடந்து வருகிறது’ என்றார்.