சின்ன திருப்பதி பெருமாள் கோவில் தேர்த்திருவிழா!
தலைவாசல்: தலைவாசல் அருகே, சின்னக்கல்வராயன் மலை, சின்ன திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாச மூர்த்தி பெருமாள் கோவில் தேர்த்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தலைவாசல் அருகே, சின்னக்கல்வராயன் மலை, சின்ன திருப்பதி என்னுமிடத்தில், பழமைவாய்ந்த, அலமேலு மங்கை சமேத ஸ்ரீனிவாசமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது. கடந்த, 13ம் தேதி, ஆஞ்சநேயர், கருடசேவை ஊர்வலமும், ஸ்வாமி சேஷ வாகன ஊர்வலமும், மண்டல பூஜைகளும், 16ம் தேதி, அலமேலு மங்கை, ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணமும், எட்டாம் பலி ஸ்வாமி புறப்பாடும், குதிரை வாகனத்தில் அலங்கார ஊர்வலமும் நடந்தது. 18ம் தேதி, ஸ்ரீனிவாசபெருமாள் அலமேலு மங்கையுடன் கோவிலை சுற்றி தேர்வடம் பிடித்தலும் நடந்தது. அப்போது, மூலவர் ஸ்ரீவெங்கடேச பெருமாள், அடிபெருமாள், அலமேலுமங்கை ஸ்வாமிகள், சந்தன காப்பு, புஷ்பம் என, சர்வ சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது பக்தர்கள், "கோவிந்தா, கோவிந்தா என, கோஷம் எழுப்பியபடி சென்றனர்.
குழந்தை வரம் கேட்டு, இளம் பெண்கள் ஏராளமானோர் மடிபிச்சை எடுத்து வந்தனர். ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று, தீர்த்தவாரி உற்சவம், கொடி இறக்குதலுடன் விழா முடிவடைகிறது. * பக்தர்கள் அனைவரும் குறைந்த பட்சமாக 20 முதல் 30 கி.மீ., தூரம் செங்குத்தான ஏழு மலைகளை கடந்து, ஸ்ரீனிவாச மூர்த்தி பெருமாளை தரிசனம் செய்தனர். 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடிகாணிக்கையும், 300க்கும் மேற்பட்ட காளை மாடுகள், வழங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். * ஆத்தூர் கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், ஐந்தாவது சனிக்கிழமையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கடேச பெருமாள், தங்கம், வெள்ளி மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.