உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரத்தினகிரி மலையை சுற்றுலா தலமாக அறிவிக்க கோரிக்கை!

ரத்தினகிரி மலையை சுற்றுலா தலமாக அறிவிக்க கோரிக்கை!

ஓசூர்: ஓசூரை அடுத்த, கெலமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட, தேவநத்தம் அருகே, ரத்தினகிரி மலை உள்ளது. ஜெகதேவராயர் என்ற சிற்றரசர் ஆட்சி காலத்தில், சிறந்த வணிக தல மாக விளங்கிய இப்பகுதி, தலைநகராகவும் செயல்பட்டு வந்தது என்பதற்கு, பல்வேறு சான்றுகள் உள்ளன. விஜயநகர அரசிடம் இருந்து கொண்டு வரப்பட்ட விலை உயர்ந்த பொருட்கள் மூலம், இப்பகுதியில் கோட்டை ஒன்று கட்டப்பட்டது. அங்கு, ராஜா, ராணி அறை, தாமரைக்குளம், வீரர்களுக்கான மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. போர்க்காலங்களில் பயன்படுத்துவதற்காக பராமரிக்கப்பட்டு வந்த குதிரை, யானை, ஓட்டகம் போன்ற விலங்குகளின் எலும்புகள், ரத்தினகிரி மலையை சுற்றியுள்ள ஜெக்கேரி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கிடைத்துள்ளன. இது ஒருபுறம் இருக்க, ஜெகதேவராயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த கோட்டை தற்போது, சிதிலமடைந்துள்ளது. மேலும், ரத்தினகிரி மலை பகுதியில், பாழடைந்த நிலையில், ஆஞ்சநேயர் மற்றும் ராமர் கோவில் உள்ளது. ஜெகதேவராயர் ஆட்சி செய்த இப்பகுதியில், புதையல் இருப்பதாக ஏற்பட்ட புரளியை தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் பலர், ஆங்காங்கு பள்ளங்களை தோட்டி, புதையல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவமும் இங்கு நிகழ்ந்துள்ளது. ஆனால், ஜெகதேவராயர் ஆட்சி கால வரலாற்றை உறுதிப்படுத்தும் விதமாக உள்ள ரத்தினகிரி மலையை, சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்பது, இப்பகுதி ஆசிரியர்கள், பொதுநல ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !