உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் கந்த சஷ்டி விழா துவங்கியது!

திருப்பூரில் கந்த சஷ்டி விழா துவங்கியது!

திருப்பூர்: திருப்பூரில் உள்ள கோவில்களில் கந்த சஷ்டி விழா, காப்புக்கட்டு விரதத்துடன் நேற்று துவங்கியது.திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் உள்ள சண்முக சுப்ரமணியர் சன்னதியில், சஷ்டி விரத முதல் நாளான நேற்று, பக்தர்கள் காப்புக்கட்டும் நிகழ்ச்சி யுடன் விழா துவங்கியது; இதையொட்டி, சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. இன்று முதல், வரும் 29ம் தேதி வரை தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன. பஞ்சாமிர்தம், பால், பழம், தயிர், இளநீர், சந்தனம் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.வரும் 29ம் தேதி மாலை 5.00 மணிக்கு, தேர் வீதியில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. வாண வேடிக்கையுடன் சுப்ரமணியர், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து, மோர் மற்றும் தயிரில் ஊற வைக்கப்பட்ட வாழைத்தண்டு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும். வரும் 30ம் தேதி, சஷ்டியின் ஏழாம் நாள், திருக்கல்யாண காட்சியுடன் விழா நிறைவடைகிறது. காப்புக்கட்டி, ஏழு நாட்களும் விரதம் மேற்கொள்ளும் முருக பக்தர்கள், பால், பழம் மற்றும் இளநீர் மட்டுமே அருந்தி, ஏழாம் நாளில் திருக்கல்யாண நிகழ்வுக்கு பின், விரதத்தை நிறைவு செய்வர்.

கொங்கணகிரி முருகன் கோவில்: திருப்பூர் காலேஜ் ரோடு, கொங்கணகிரியில் உள்ள வள்ளி தேவ சேனா சமேத கந்தசுப்ரமணிய சுவாமி கோவிலில், இரண்டாம் ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. வரும் 29ம் தேதி, மாலை 4.30 மணிக்கு வாண வேடிக்கை, சாமி புறப்பாடு, மேள தாளங்கள் முழங்க சூரசம்ஹார விழா நடக்கிறது. வரும் 30ம் தேதி காலை 9.00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

மலைக்கோவில்: மங்கலம், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று துவங்கியது; வரும் 29ம் தேதி மாலை, சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 30ம் தேதி காலை, திருக்கல்யாணத்தை தொடர்ந்து, தம்பதி சமேதராக சுப்ரமணிய சுவாமி, சப்பரத்தில் எழுந்தருளி மலையடிவாரத்தில் உள்ள பட்டி விநாயகரை ஒன்பது முறை வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !