உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழங்குடியின அறுவடை திருவிழா கோலாகலம்!

பழங்குடியின அறுவடை திருவிழா கோலாகலம்!

கூடலூர் : பழங்குடியின மக்களின், ’கதிர் அறுவடை திருவிழா’, கூடலூர் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூரில், பனியர் இன பழங்குடி மக்கள், ’பூ பூத்தரி’ என்கிற ’கதிர் அறுவடை’ திருவிழாவை, பாரம் பரியமாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு விழா, நம்பாலக்கோட்டை, வேட்டைகொருமகன் கோவிலில், நேற்று காலை துவங்கியது.

சிறப்பு பூஜைகளுக்கு பின், கதிர் அறுவடைக்காக, பழங்குடியினர், கோவிலிலிருந்து புறப்பட்டு, புத்தூர்வயல் சென்றனர். அங்கு, வயலில் குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, குல தெய்வத்துக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்தனர். தொடர்ந்து, அவர்களின் பாரம்பரிய இசை முழங்க, கதிர் அறுவடை பணியில் ஈடுபட்டனர். அறுவடை செய்த நெற்கதிர்களை, ஒரே கட்டாக்கி தலையில் சுமந்து, வயல் பகுதியை மூன்று முறை சுற்றி வந்தனர். பின், பகவதி அம்மன் கோவில் திறந்த மண்டபத்துக்கு, நெற்கதிரை ஊர்வலமாக எடுத்து சென்றனர். அங்கு, இறக்கி வைத்து பூஜை செய்தனர். அப்போது, பழங்குடியின பெண்கள், அங்கு பாரம்பரிய நடனம் ஆடினர். பூஜைக்கு பின், நெற்கதிரை மூன்றாக பிரித்து, ஒரு பகுதியை, மங்குழி பகவதி அம்மன் கோவிலுக்கும், ஒரு பகுதியை, ஸ்ரீ மதுரை விஷ்ணு கோவிலுக்கும் எடுத்து சென்றனர். மூன்றாவது கட்டை, நம்பாலக் கோட்டை வேட்டைகொருமகன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். அங்கு, நெற்கதிருக்கு சிறப்பு பூஜை செய்து, விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !