அரியலூர் பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் கந்தசஷ்டி விழா
அரியலூர்: அரியலூர் பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவிலில், கந்த சஷ்டி உற்சவ விழாவை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில், வள்ளி, தெய்வானை சமேதராக ஸ்வாமி திரு வீதி உலா நடந்தது.அரியலூர், பெரியகடை தெரு அருகே, பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவில் உள்ளது. 700 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், கந்தசஷ்டி மகோற்சவ விழா, கடந்த, 24ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. 25ம் தேதி யானை வாகனத்திலும், 26ம் தேதி குதிரை வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய ஸ்வாமி எழுந்தருளினார். தொடர்ந்து நாள்தோறும் ரிஷப வாகனம், வெள்ளி மயில் வாகனத்தில் ஸ்வாமியின் திருவீதி உலா நடைபெறுகிறது. கந்தசஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நாளை (29ம் தேதி)யும், 30ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவிலின் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா சுந்தரலிங்கம், பாலசுப்ரமணிய குருக்கள் உள்ளிட்டோர் செய்கின்றனர்.