சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்!
நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலவர் கோவிலில், கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாகை அடுத்த சிக்கலில்,கோச்செங்கட் சோழனால் கி.பி.4 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது.முருகப்பெருமானின் அவதார நோக்கமான சூரசம்ஹாரத்திற்கு, இக்கோவிலில் தான் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்த புராண வரலாறு.
திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர்,கச்சியப்பர்,சிதம்பரமுனிவர் ஆகியோர்களால் பாடல் பெற்ற, இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 23 ம் தேதி,கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நாள்தோறும் சிங்காரவேலவர், ஆட்டுக்கிடா, தங்கமயில்,வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வாக காலை 5.00 மணிக்கு சிங்காரவேலவர், வள்ளி,தெய் வானை சமேதராய் சர்வ அலங்காரத்துடன் திருத்தேரில் எழுந்தருளி,வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.