உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர், பழநியில் இன்று சூரசம்ஹாரம்!

திருச்செந்தூர், பழநியில் இன்று சூரசம்ஹாரம்!

துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோயில் கந்தசஷ்டி விழாவில் இன்று மாலை 4:30 மணிக்கு ’சூரசம்ஹார’ நிகழ்ச்சி நடக்கிறது.முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்துாரில், கந்த சஷ்டி விழா அக்., 24ல் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ’சூரசம்ஹாரம்’ இன்று நடக்கிறது. இன்று மாலை 4:30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரைக்கு எழுந்தருளுகிறார்; தொடர்ந்து ’முதல் தலைபடுதல்’ நிகழ்ச்சி நடக்கும்.

நாளை (எட்டாம் நாள்) அதிகாலை 5 மணிக்கு தேவசேனாம்பாள் தபசுக்காட்சிக்கு எழுந்தருளல், மாலை 6:30 க்கு சுவாமி எழுந்தருளல், அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து, தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி ஆகியவை நடக்கும்; இரவு, திருக்கல்யாணம் நடக்கிறது.ஒன்பதாம் நாளில், சுவாமி அம்பாளுடன் மயில் வாகனத்தில் நகர் வலம் வருதல், அடுத்த மூன்று நாட்களுக்கு சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடக்கும். நவ., 4 ல் விழா நிறைவு பெறுகிறது.

* பழநி மலைக்கோயிலில் அக்.,24 ல் காப்புகட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கி அக்.,30 வரை நடக்கிறது. நாளை, சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், அதிகாலை 4:30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம் நடக்கிறது.

தங்கரதம் நிறுத்தம்: வழக்கமாக மாலை 5:30 மணிக்கு நடக்கும் சாயரட்சை பூஜை பிற்பகல் 1:30 மணிக்கு நடக்கிறது. பிற்பகல் 2:30 மணிக்கு சின்னக்குமார சுவாமி, அசுரர்களை வதம்புரியும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கியவுடன் சன்னதி நடை சாத்தப்படும். இதனால் தங்கரதப் புறப்பாடு கிடையாது.

சூரசம்ஹாரம்: திருஆவினன்குடியில் பராசக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு நான்கு கிரிவீதிகளிலும் தாரகாசூரன், பானு கோபன்சூரன், சிங்கமுகாசூரன், சூரபத்மன் ஆகிய அசுரர்களை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருக்கல்யாணம்: நாளை காலை 10 மணிக்கு மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி தேவசேனாவிற்கும்; இரவு 7 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக் குமாரசுவாமி, வள்ளி,தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !