கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
கோவை : கோவை, அம்மன்குளம், ராஜிவ்நகரிலுள்ள, பாலவிநாயகர், பாலமுருகன், தேவி, கருமாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மங்கள இசையுடன் கூடிய கணபதி ஹோமம் நடந்தது. புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலிலிருந்து முளைபாலிகை, தீர்த்த கலசங்கள், கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன. மாலை 4.30 மணியளவில், பூர்வாங்க கிரியைகள் எனும் மங்கள இசை, விநாயகள் பூஜை, புண்யாகம், பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தியும், முதற்கால யாக பூஜை, வேத சிவாகம திருமுறை பாராயணம், இரவு அஷ்டபந்தனம் உள்ளிட்ட வழிபாடுகளும் நடந்தன.
மறுநாள் காலை 5.45 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, விநாயகர் வழிபாடுடன் துவங்கப்பட்டது. காலை 8.30 மணிக்கு மஹாபூர்ணாகுதி, யாத்ரா தானம், திருக்குடங்கள் கோவிலை வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 9.00 மணிக்கு விமான கலசத்திற்கு, திருக்குட நன்னீராட்டை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில் ஸ்தானீகர் நடராஜ சிவாச்சாரியார், சர்வசாதகம் ஈசான கல்யாண சுப்பிரமண்யசிவம் ஆகியோர் தலைமையில் நடந்தன.
இதையடுத்து, 9.00 மணிக்கு தேவி ஸ்ரீ கருமாரியம்மன், பாலவிநாயகர், பாலமுருகன் மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், அலங்கார பூஜை, தச தானம், தச தரிசனம், பிரசாதம் வழங்குதலும் நடந்தன. விழா மற்றும் அன்னதானத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.