உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூதத்தாழ்வார் திருத்தேர் உற்சவம்!

பூதத்தாழ்வார் திருத்தேர் உற்சவம்!

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், பூதத்தாழ்வார் திருத்தேர் உற்சவம், நேற்று நடந்தது.
ஆழ்வார்களில் குறிப்பிடத்தக்கவரான பூதத்தாழ்வார், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் அருகில், ஐப்பசி அவிட்ட நாளில் அவதரித்தார். அவர், தனி சன்னிதி கொண்டுள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் கொண்டாடும் அவரது அவதார உற்சவம், கடந்த 23ம் தேதி துவங்கியது.

அதைத் தொடர்ந்து, தினமும் சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், திவ்விய பிரபந்தம், திருவாய்மொழி ஆகிய சேவைகள் மற்றும் திருவீதியுலா ஆகியவை நடந்தன.நேற்று, பூதத்தாழ்வார் திருத்தேர் உற்சவம் நடந்தது. கோவிலில், காலையில் சிறப்பு யாகம் செய்து, அலங்கார திருத்தேரில் பூதத்தாழ்வார் எழுந்தருள, ஸ்தலசயன பெருமாள் மரியாதை செலுத்தினார். காலை 9:15 மணிக்கு தேரை, பக்தர்கள், கோவிந்தா கோஷமிட்டு வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

கிழக்கு ராஜவீதி, தென்மாட வீதி, மேற்கு ராஜவீதி வழியாக, நகரை வலம்வந்து, 12:15 மணிக்கு நிலையை அடைந்தது. இரவு, பொய்கையாழ்வார் சாற்றுமறை நடந்தது. இன்று பூதத்தாழ்வார் மூலவர் திருமஞ்சனம், ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள் ஆகியோர் சன்னிதிகள், ஆதிவராக பெருமாள் கோவில் ஆகியவற்றில், மங்களாசாசனம், வீதியுலா நடைபெறும். செயல் அலுவலர்கள் வஜ்ஜிரவேலு, ஜெயச்சந்திரன் ஆகியோர் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !