உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் தரிசனத்திற்கு 4 மணி நேரம்!

திருத்தணி முருகன் தரிசனத்திற்கு 4 மணி நேரம்!

திருத்தணி: முகூர்த்த நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், திருத்தணி முருகன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். புரட்டாசி மாதத்திற்கு பின், முதல் முகூர்த்த நாள், நேற்று என்பதால், திருத்தணி நகரத்தில் உள்ள, 160க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் திருமணம் நடந்தது. இதுதவிர, முருகன் மலைக்கோவிலில், 17 திருமணங்கள் நடந்தன. இந்த திருமணத்திற்காக அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, நேற்று முன்தினம் இரவே வந்து திருத்தணியில் தங்கியிருந்தனர். நேற்று காலை முகூர்த்தம் முடிந்தவுடன் மணமக்கள் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் மூலவர் முருகப்பெருமானை தரிசிக்க மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும், நேற்று, ஞாயிறு விடுமுறை என்பதால், வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. ஒரே நாளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொது வழியில், மூலவரை தரிசிக்க, நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சிறப்பு கட்டண டிக்கெட் பெற்றவர்கள் ஒன்றரை மணி நேரம், முதல் இரண்டு மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !