உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானானந்தகிரி சுவாமிகள்

ஞானானந்தகிரி சுவாமிகள்

சித்தர்கள் பூமியான திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் வழித் தடத்தில் பிரதான சாலையிலேயே வருகின்ற அழகான - ஆன்மிகம் மணக்கும் பிரதேசம் - தபோவனம்.  திருக்கோவிலூரில் இருந்து சுமார் 6 கி.மீ.தொலைவு.  இங்குதான் ஸ்வாமி ஸ்ரீஞானானந்தகிரி அவர்களால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட ஸ்ரீஞானானந்தகிரி தபோவனம்  அமைந்துள்ளது.  ஸ்வாமிகளின் ஜீவ சமாதியுடன் கூடிய பெரும் ஆலயமாக இது திகழ்ந்து வருகிறது. தன் வாழ்க்கையின் இறுதிக் காலத்தை ஸ்வாமிகள் இங்கேதான் கழித்தார்.  மகா பெரியவாளைப் போல ஸ்ரீஞானானந்தகிரியும் நூறு வயதைக் கடந்தவர்.  என்றாலும், ஸ்ரீஞானானந்தகிரி இருநூற்றைம்பது வருடங்களுக்கும் மேல் வாழ்ந்தவர் என்பது அவரது பக்தர்கள் தரும் தகவல்.  ராமகிருஷ்ண பரமஹம்சர், வள்ளலார், ஷீரடிபாபா, காஞ்சி மகா பெரியவா, ஸ்ரீஅரவிந்தர், சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண மகரிஷி,  விட்டோபா ஸ்வாமிகள், யோகி ராம்சுரத்குமார் உட்பட பல மகான்களையும் ஸ்வாமிகள் சந்தித்து உரையாடியதாக அவரது பக்தர்கள் கூறுகின்றனர்.  எத்தனையோ பக்தர்கள் ஸ்வாமிகளிடம் வயது பற்றிக் கேட்டபோதெல்லாம் பதில் சொல்லாமல் சிரித்தே அனுப்பி விடுவாராம்.

ஸ்வாமிகளின் திருமுகம் ஓரு பக்தரின் மனதில் பதிந்துவிட்டால், அந்த வடிவம் நீங்காத நினைவாக என்றைக்கும் இருக்கும்.  அப்படி ஒரு வசீகரிகரத் தோற்றம் ஸ்வாமிகளுக்கு.  எப்போதும் சிரித்த முகம்.  எளிமையான காவி உடை.  சற்றே பருத்த தேகம்.  கருணைபொங்கும் விழிகள்.  வருகின்ற பக்தர்களை அன்புடன் உபசரிக்கும் தாய் உள்ளம்.  இவைதான் ஸ்வாமி ஞானானந்கிரி.  அடிக்கடி தேவா தேவா என்று சொல்லிக் கொண்டே இருப்பார். ஸ்வாமிகளின் அவதாரம் பற்றி பல்வேறுபட்ட கருத்துக்கள் உண்டு என்றாலும், வெகுவாகச் சொல்லப்படும் அவரது அவதாரத்தைப் பற்றிக் காண்போம். வட கர்நாடகப் பகுதியில் கோகர்ணத்துக்கு அருகே மங்களபுரி என்கிற ஊர் உண்டு.  அங்கே வெங்கோகணபதி - சக்குபாய் என்கிற அந்தணத் தம்பதியினருக்குத் திருமகனாக உதித்தார் ஸ்வாமிகள் , பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியம். சிறுவனாக இருந்தபோது ஏட்டுக் கல்வி சுப்பிரமணியத்துக்கு ருசிக்கவில்லை.  தியானமும் சமாதி நிலையும் அந்த சிறு வயதிலேயே கூடி வந்தது.  தனக்கு உரிய குருவைத் தேட ஆரம்பித்தார்.  ஒரு கட்டத்தில் இறைவனே ஜோதி வடிவில் இவருக்கு வழி காட்ட - தனது பன்னிரண்டாம் வயதில்  வீட்டை விட்டு விச்ராந்தியாகப் புறப் பட்டார்.  நெடுநாட்கள் நடையாய் நடந்து பண்டரிபுரம் வந்து சேர்ந்தார்.  பண்டரிபுரத்து பகவானான ஸ்ரீபாண்டுரங்கன், சுப்பிரமணியத்துக்கு
அருள் புரியத் திருவுளம் கொண்டான்.

அங்கே சந்திரபாகா நதிக்கரையின் ஓரம் ஒரு நாள் பகல் பொழுதில் மணல்வெளியில் படுத்து உறங்கிக் கொணடிருந்தார் சுப்பிரமணியம்.  அப்போது  பாண்டுரங்கனே ஒரு முதியவர் வடிவில் வந்து சிறுவனைத் தட்டி எழுப்பினார். பண்டரிபுரத்தில் ஸ்ரீஆதி சங்கரர் நிறுவிய ஜ்யோதிர் மடத்தின் பீடாதிபதி ஸ்வாமி சிவரத்னகிரியை குருவாக ஏற்றுக்கொள். உடனே போய் அவரை தரிசனம் செய் என்று அருளி மறைந்து விட்டார். பொசுக்கென்று விழித்த சுப்பிரமணியம் அங்கிருந்து புறப்பட்டு ஜ்யோதிர் மடத்தை அடைந்து ஸ்வாமி சிவரத்னகிரியின் தரிசனம் கிடைக்கப் பெற்றார்.  இப்படி ஓரு சீடன் தன்னைத் தேடி வருவான் என்பதை அறியாதவரா ஸ்வாமி சிவரத்னகிரி? அன்புடன் ஏற்றுக்கொண்டு சாஸ்திரம் . உபநிஷதம், யோகம், தியானம், இதிகாசம் போன்ற அனைத்தையும் போதித்தார். கல்வி கற்கின்ற ஆர்வத்தில் உணவு உறக்கத்தை சுப்பிரமணியம் மறந்த பொழுதுகளே அதிகம்.  அந்த அளவுக்கு சிரத்தையுடன் கற்றார்.

தான் முக்தி அடைய வேண்டிய வேளை நெருங்கி விட்டது.  என்பதை அறிந்த ஸ்வாமி சிவரத்னகிரி, சுப்பிணியத்தை  அழைத்து அவருக்கு தீட்சை அளித்து ஸ்வாமி ஸ்ரீஞானானந்தகிரி என்கிற திருநாமம் சூட்டினார்.  பிடாதிபதி பொறுப்பையும் ஒப்படைத்தார்.  தன் பணி ழுடிந்து விட்டதென அடுத்து வந்த ஒரு சில தினங்களில் முக்தி அடைந்தார் ஸ்வாமி சிவரத்னகிரி. ஜ்யோதிர் மடத்தின் பீடாதிபதி பொறுப்பை  ஏற்றார் ஸ்வாமிகள் நாட்கள் ஒடின.  ஓரே இடத்தில் பீடாதிபதியாக  அமரிந்திருப்பது.  ஸ்வாமிகளுக்கு மகிழ்ச்சியைத்  தரவில்லை.  தான் ஆற்ற வேண்டிய சமயப் பணிகள் ஏரளாம் இருப்பதை  உணர்ந்தார்.  எனவே, ஸ்வாமி ஆனந்தகிரி என்கிற தனக்கு அடுத்த மாடதிபதியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கூண்டில் இருந்து விடுதலை ஆகிச் செல்லும் கிளிபோல் வெளியே புறப்பட்டார். புனித யாத்திரையைத் துவங்கினார்.  இமயமலை சென்று அங்கே தவம் புரிந்தார்.  கங்கோத்ரியில் பல ஆண்டு வாசம் .  திபெத், நேபாளம், இலங்கை, மலேஷியா, பர்மா. போன்ற தேசங்களுக்கும் ஸ்வாமிகள் பயணப்படிருக்கிறார்.

ஞான தபோவனம் அவரைத் திருக்கோவிலூருக்கு  அழைத்து.  வடஇந்தியாவில் இருந்து தென்னிந்தியா வந்தார்.   சேலம் அருகிகே ஆட்டையாம்பட்டியில் ஆசிரமம்  அமைத்துச் சில காலம் தங்கி இருந்தார்.  பின்  திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சித்தலிங்கமடத்தில் தங்கி இருந்தார். பிறகு திருக்கோவிலூர் அருகே அமைந்துள்ள தபோவனம் வந்தார்.  ஆசிரமம் அமைத்தார்.  இதுவே பின்னாளில் ஸ்ரீஞானானந்த தபோவனம் ஆனது.  தினமும் அதிகாலையில்  தியானம், கூட்டு வழிபாடு, நாம சங்கீர்த்தனம் போன்றவற்றை மேற்கொண்டார்.  ஒவ்வொரு பணியிலும் ஸ்வாமிகள் காட்டிய சுறுசுறுப்பும் பொறுமையும் தபோவனத்தின் பெருமையை உச்சத்துக்குக் கொண்டு சென்றது என்றே சொல்லலாம்.  இதனால் தபோவனத்துக்கு வருகின்ற பக்தர்களின் கூட்டம் பெருகியது.  ஸ்வாமிகளின் ஜீவ சமாதி திருக்கோயில் தபோவனத்தில் அமைந்துள்ளது.  தவிர இங்கே ஞானகணேசர், ஞானஸ்சுந்தர், ஞானபுரீஸ்வரர், ஞானாம்பிகை, ஞான ஆஞ்சநேயர், ஞான பைரவர், ஞான மஹா லட்சுமி உட்பட பல தெய்வங்களுக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. ஸ்ரீஞானானந்தரின் சீடரான ஹரிதாஸ்கிரியை அறியாதவர்களும் இருக்க முடியாது.  இவர்கள் இருவரும் சம்மந்தப்பட்ட ஒரு நிகழ்வு-

ஸ்வாமிகள் இருந்தபோது ஒரு முறை விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெற்றது.  வீதி உலாவுக்காக உத்ஸவர் விநாயகருக்கு வெகு பிரதமாதமாக அலங்காரம் செய்திருந்தார்கள்.  ஆபரண அணிகலன்கள் என்ன.... பாட்டாடைகள் என்ன....ஆஹா! விநாயகர் அன்று ஏக்கத்துக்கும் ஜொலித்தார்.  ஸ்வாமிகளின் அத்யந்த பக்தர்களும் சீடர்களும் உடன் இருந்தனர். அப்போது விநாயகருக்கு அலங்காரம் செய்த ஒரு அர்ச்சகரைப் பார்த்து ஸ்வாமிகள், இங்கே ஊர்வலத்தில் வருவது என்ன தெய்வம்?  கோயிலின் உள்ளே கருவறையில் இருப்பது என்ன தெய்வம் என்று மூலவர் விநாயகர் சந்நிதியைக் காட்டிக் கேட்டார்.  ஸ்வாமிகள் ஒன்றும் புரியாதவர் அல்ல.... இருந்தாலும் இவர் கேட்டால், ஏதோ உட்பொருள் இருக்கும் என்று சிந்தித்த அந்த அர்ச்சகர், இரண்டும் விநாயகர்தான் என்றார். ஸ்வாமிகள் புன்னகைத்தார்.  பிறகு, ஏன் உத்ஸவருக்கு மட்டும் இத்தனை அலங்காரம் - படாடோபம்?  ஆனால், உள்ளே இருக்கிற மூலவருக்கு வெறும் ஒரு முழம் பூதானா? என்று கேட்க.... கூடி இருந்த அன்பர்கள் என்ன
பதில் சொல்வதென்று திகைத்தனர் அர்ச்சகரும்தான். ஒரு சில விநாடிகளுக்குப் பின் ஸ்வாமிகள், எவரும் திகைக்க வேண்டாம்.  இது சரிதான். மூலவருக்கு ஆடம்பரம் வேண்டாம்.  அவர் வீதி உலா போகப் போவதில்லை.  ஆனால், உத்ஸவர் ஆடம்பரத்தோடு இருப்பதுதான்
அழகு.  இங்கே மூலவர்தான் ஸ்வாமி என்று தன்னைக் காட்டிச் சொல்லி விட்டு, அருகே இருந்த சீடர் ஸ்வாமி  ஹரிதாஸ்கிரியைக் காண்பித்து, உத்ஸவருக்கு ஆடம்பரம் அவசியம் தேவைதான் என்று சொல்ல... ஸ்வாமி ஹரிதாஸ்கிரி முகத்தில் ஒரு பிரகாசம் ஏற்பட்டதாகச் சொல்வர்.


அந்த அளவுக்கு ஓரு இணக்கமான சீடராக ஞானானந்தருக்கு அமைந்தார் ஹரிதாஸ்கிரி.  தன் குருநாதர் ஞானாந்தகிரியின் தூதுவராக வெளியூர் நிகழ்ச்சிகளூக்குத் தான் பயணப்பட்டுச் செல்வதாகக் கூறுவார்.  ஹரிதாஸ்கிரி, எந்த ஒரு நிகழ்ச்சிக்காவும் வெளியே புறப்படுவதற்கு முன் குருநாதரின் உத்தரவைப் பெறுவார்.  பிரவசனங்களின்போது தான் பயன்படுத்தும் சிப்லா கட்டைகளைப் பணிவுடன் குருநாதரிடம் தருவார்.  அதை வாங்கி ராம நாமம் ஜபித்து ஹரிதாஸ்கிரியிடம் கொடுப் பார் ஞானா னந்தகிரி.  அதாவது குருநாதரின் திருக் கரம் அந்த சிப்லாக் கட்டைகளின் மேல் பட்டவுடன் அனைத்தும் ஸித்திக்கும் எனவும், குருநாதரின் பரிபூராண அருள் உடன் இருந்து அந்த நிகழ்ச்சி ஜயமாகும் எனவும் சீடருக்கு அபார நம்பிக்கை. உலகம் முழுக்க நாம சங்கீர்த்தனம் மற்றும் பாண்டுரங்க பக்தர்களின் வாழ்க்கை வரலாறு களை பிரவசனம் செய்து வந்த ஸ்வாமி ஹரிதாஸ்கிரி.  குருநாதரின் நினைவாக வந்தவாசிக்கு அருகே தென்னாங்கூரில் ஸ்ரீபாண்டுரங்கன் - ரகுமாயிக்கு பூரி ஜகந்நாதர் கோயிலைப் போலவே பிரமாண்டமான ஆலயம் எழுப்பினார்.

காஞ்சி காமாட்சி, சிருங்கேரி சாரதா, மதுரை மீனாட்சி போல் ஜ்யோதிர் மடத்துக்கான தேவியாக வணங்கப்பட்டு வருபவள் ஸ்ரீமஹாஷோடஸி.  குருநாதரின் நினைவைப் போற்றும் விதமாக இந்ததேவிக்கும் தென்னாங்கூரில் ஒரு சந்நிதியும் உண்டு.  மஹாஷோடஸி என்பவள் துர்கா - சரஸ்வதி- லட்சுமி ஆகிய முத்தெய்வங்களின் இணைந்த அம்சம். எனவே, நாவரத்திரி காலத்தில் இந்த தேவிக்கு நடத்தப்படுகின்ற வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றது. தனது உலக வாழ்க்கை ஒரு முடிவுக்கு வர இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னேர உணர்ந்தார் ஸ்வாமிகள்.  எனவே,
தன் கடைசிக்காலத்தில் வெளி நிகழ்வுகளைப் புறக்கணித்து தனிமையில் அமர்ந்து தியானத்துக்காகப் பெரும் பகுதியை தபோவனத்திலேயே கழித்தார். ஞானானந்தகிரி ஸ்வாமிகள் ஜீவ சமாதி ஆனது 1974-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் துவக்கத்தில்.  ஒரு தினத்தில்
சித்தாசனத்தில் அமர்ந்தவர், அந்த நிலையிலேயே இருந்தார்.  ஒரு சில நாட்கள் கழிந்தும் எழுந்திருக்கவே இல்லை. அதே நிலையிலேயே பரம்பொருளுடன் இரண்டறக் கலந்து விட்டார்.  ஸ்வாமிகளின் ஜீவ சமாதி நிலையைப் பார்த்து அவரது பக்தர்கள் வியந்து போனார்கள்.  அவரது முகத்திலும் தேகத்திலும் இருந்த பொலிவு சற்றும் மாறவில்லையாம்.

ஞானானந்தகிரி ஸ்வாமிகளின் ஆராதனை நிகழ்வு மார்கழி மாத்தில் ஐந்து நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பொதுவாக இது டிசம்பர் இறுதியிலோ, ஜனவரி துவக்கத்திலோ வரும். இரண்டே இரண்டு கொள்கைகளைத்தான் தன் கடைசிக் காலம் வரை கடைப்பிடித்தார் ஸ்வாமிகள். முதலாவது - பலரது பசிப் பிணி போக்குதல்.  இதற்காக ஸ்வாமிகள் நடத்தும் அன்னதானம் மிகவும் சிறப்பு பெற்றது. முறம், சோறு,,
படிக் குழம்பு விருந்து தந்த மகான்  என்று இவரைப் புகழ்வார்கள். இரண்டாவது - நோய் போன்ற உடல் உபாதைகளை நீக்குதல்.  தன் அருளாசியால் பலரது வியாதிகளைப் போக்கி இருக்கிறார் இந்த மகான்.  தபோவனத்துக்கு என்னை நாடி வருபவர்களின் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்வேன் என்று ஸ்வாமி ஞானானந்தகிரி அருளி இருக்கறார்.  அந்தத் திருவாக்கின்படி தன் ஜீவ சமாதி தேடி வரும் அன்பார்களை இன்றளவும் காத்து வருகிறார் என்பதற்கு அங்கு குவியும் பக்தர்களே சாட்சி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !