பள்ளி வாசலை குல தெய்வமாக வணங்கும் இந்துக்கள்: தீக்குழி இறங்கி நேர்த்தி கடன்!
திருப்புவனம்: திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் பள்ளிவாசலை இந்துக்கள் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். முதுவன்திடல் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஏராளமான முஸ்லிம்கள் வசித்து வந்தனர். இந்து, முஸ்லிம் பண்டிகையை ஒற்றுமையாக கொண்டாடி வந்தனர். இந்துக்கள் தங்கள் நிலங்களில் விவசாயம் செழிக்கவும் ஊர்மக்கள் நலமுடன் வாழவும் பள்ளிவாசலில் வேண்டுவது வழக்கம். விதைப்பின் போது நெல் நாற்றுகளை பள்ளிவாசலில் வைத்து பாத்தியா ஓதி அதன்பின் நடவு செய்துவந்தனர். அதுபோல அறுவடையின் போது விளைந்த நெற்கதிர்களை பள்ளி வாசலில் வைத்து பாத்திய ஓதி வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். மொகரம் நாளன்று பள்ளிவாசல் முன் தீ வார்த்து ஆண்கள் தீக்குழி இறங்கியும், பெண்கள் தீக்கங்குகளை தலைமீது வாரி போட்டும் நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். ஆண்கள், சிறுவர்கள் பத்து நாட்கள் முன் காப்பு கட்டி விரதமிருந்து மொகரம் அன்று அதிகாலை கண்மாயில் நீராடி விட்டு வரிசையாக தீக்குழி இற ங்குகின்றனர். தீக்குழி இறங்கும் பக்தர்களை முஸ்லிம்கள் திருநீறு பூசி ஆசிர்வதிக்கின்றனர். பெண்கள் தீக்கங்குகளை தலைமீது வாரி போட்டு நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். இவ்வாறு செய்வதால் தங்களை நோய் நொடி அண்டாது என நம்புகின்றனர். பின் முஸ்லிம் சப்பர ஊர்வலம் நடைபெறுகிறது. வேண்டுதல் இருக்கும் பக்தர்கள் சப்பரத்தை கிராமம் முழுவதும் துõக்கி கொண்டு உலா வருகின்றனர். பின் பக்தர்களுக்கு சர்க்கரை, பானக்கரம் உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.