குமாரநல்லூர் கோவிலை சீரமைக்க நிர்வாகம் முடிவு!
கோட்டயம் : தீ விபத்தில் சேதமடைந்த, குமாரநல்லூர் தேவி கோவிலை, நவ., 27ம் தேதி துவங்க இருக்கும் திருவிழாவுக்கு முன் சீரமைக்க, கோவில் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற குமாரநல்லூர் தேவி கோவில் உள்ளது. இக்கோவில் நாலம்பலத்தில், அக்., 31ம் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது தொடர்பாக, கோவில் நிர்வாக குழுவான, ஊராண்மைக் குழு சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. அதில், தீ விபத்து நேரிட்டதால், கோவிலில் சுத்தி கலசம் நடத்தவும், நவ., 27ம் தேதி முதல் கார்த்திகை உற்சவ திருவிழாவை சிறப்பாக நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. உற்வசம் துவங்குவதற்கு முன், தீயில் பாதிக்கப்பட்ட, தெற்கு -மேற்கு விளக்குமாட பகுதியில் தற்காலிக சுற்று விளக்குகள் அமைக்கவும், விபத்து ஏற்பட்ட சிவன் கோவிலிலும் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில், தீ தடுப்பு கருவிகள் பொருத்தவும், கோவில் கண்காணிப்புக்கு கூடுதல் ஊழியர்கள் நியமிக்கவும் ஆலோசித்து வருவதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.