14 லட்சம் செலவில் வெள்ளி மயில் வாகனம்; சென்னிமலை முருகனுக்கு!
சென்னிமலை : சென்னிமலை முருகனுக்கு, 14 லட்சம் ரூபாய் செலவில், வெள்ளி மயில் வாகனம், ஸ்ரீமுருகன் மங்கள வார விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது.
ஸ்ரீ முருகன் மங்கள வார விழாக்குழு, சென்னிமலையில் கடந்த, 20 ஆண்டுகளாக செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில், சென்னிமலை முருகன் கோவிலில், பல பணிகள் செய்து வருகின்றனர். குறிப்பாக, வேங்கை மர தேர் செய்து வழங்கினர்.அதை வாரம் தோறும், செவ்வாய்கிழமை இரவு, ரத ஊர்வலம் நடத்தி வருகின்றனர். வாரம் தோறும் இந்த ரத ஊர்வலம் காண, மலைகோவிலில் அதிகபடியான பக்தர்கள் குவிகின்றனர். இவர்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.தற்போது, 14 லட்சம் ரூபாய் செலவில், 22.5 கிலோ வெள்ளியை பயன்படுத்தி, வெள்ளி மயில் வாகனம் குடை செய்து கொடுத்துள்ளனர்.இதை திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம் ஸ்ரீசெல்வவிநாயக சிற்ப கலை கூடத்தை சேர்ந்த சிற்பிகள், வடிவமைத்துள்ளனர்.
இதை கோவிலுக்கு ஒப்படைத்தல், ஸ்ரீமுருகன் மங்கள வாரவிழாக்குழு, 21ம் ஆண்டு தொடக்க விழா, புதிய வெள்ளி மயில் வாகன புறப்பாடு, வெள்ளோட்ட விழா நடந்தது.நேற்று முன்தினம், சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, கொடுமுடி சென்று, காவிரியில் தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்று காலை, 7 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் இருந்து, தீர்த்த கலசங்களுடன் வெள்ளி மயில்வாகனம், மலைக்கு மேளதாளங்களுடன் எடுத்து செல்லப்பட்டது. காலை, 11 மணிக்கு மலை கோவிலில் சிறப்பு யாகம், பூர்ணாகுதி பூஜைகள் நடந்தது. பின், மஹாஅபிஷேகம் முருகப்பெருமானுக்கு நடந்தது.மதியம், 1 மணிக்கு, முருகப்பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடும், வெள்ளோட்டமும் நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ முருகன் மங்கள வார விழாக்குழு வினர் செய்திருந்தனர்.