உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீப திருவிழா பத்திரிக்கை வினியோகம்; சிறப்பு பூஜையுடன் தொடங்கியது!

தீப திருவிழா பத்திரிக்கை வினியோகம்; சிறப்பு பூஜையுடன் தொடங்கியது!

திருவண்ணாமலை : கார்த்திகை தீப திருவிழா பத்திரிக்கை வினியோகம், விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தொடங்கப்பட்டது.திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும், 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் டிசம்பர், 5ம் தேதி, 2,668 அடி உயரமுள்ள மலை மீது மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.

தீப திருவிழாவின் பூர்வாங்க பணிகளான தேர் பழுது பார்த்தல், பத்திரிக்கை அச்சடித்தல், வாகனம் பழுது பார்த்தல், வர்ணம் அடித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த மாதம், 6ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதை தொடர்ந்து தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.இதில், தீப திருவிழாவிற்கான பத்திரிக்கை சிவகாசியில் அச்சிடப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, அண்ணாமலையார் கோவிலில் ஸ்வாமி சன்னதி முன் உள்ள தங்க கொடிமரத்தின் அருகே, விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தியாகராஜ குருக்கள், கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன், கோவில் மேலாளர் துவாரநாத் மற்றும் கோவில் ஊழியர்கள், குருக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். பத்திரிக்கை சிறப்பு பூஜை செய்யப்பட்டு, முதல் பத்திரிக்கை கோவில் குருக்களுக்கு, இணை ஆணையர் செந்தில்வேலவன் வழங்கினார். இதையடுத்து, முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பத்திரிக்கை வினியோகிக்கும் பணி தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !