உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம்!

திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு, அன்னாபிஷேகம் நடந்தது. சிவபெருமானுக்கு ஒவ்வொரு நட்சத்திரத்திலும், அதற்கு உகந்த பொருட்களால் பூஜித்து வழிபடுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் சிவனுக்கு, அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.

ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திர தினமான நேற்று, அண்ணாமலையார் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 100 கிலோ அரிசியில் சாதம் செய்யப்பட்டு அண்ணாமலையாருக்கு, அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அண்ணாமலை ஸ்வாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு, அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம், பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோன்று சிவாஞ்சி குளத்தில் உள்ள சிவன் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !