தேசிய யாத்திரை ஸ்தலமாக சபரிமலையை அறிவிக்க முடிவு!
ADDED :3993 days ago
திருவனந்தபுரம் : கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும், 17ம் தேதி மகரவிளக்கு உற்சவம் துவங்குகிறது. இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து, கேரள மாநில உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ரமேஷ் சென்னிதலா, தேவசம் போர்டு அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார். பின், அவர் கூறியதாவது: சபரிமலையை தேசிய யாத்திரை ஸ்தலமாக அறிவிக்கும்படி, மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம். அப்படி அறிவித்தால், மத்திய அரசிடமிருந்து ஏராளமான நிதி கிடைக்கும். இதை வைத்து, சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக பல திட்டங்களை செயல்படுத்த முடியும். சபரிமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், மாநில அரசுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.