ஆனைமலை மசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா; மயான பூஜையில் குவிந்த பக்தர்கள்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் விழாவையொட்டி, முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்றுமுன்தினம் நள்ளிரவு நடந்தது. நள்ளிரவு மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடித்தவுடன், தலைமை முறைதாரர் மனோகர், மயான அருளாளி அருண், உட்பட பல அருளாளிகள் அம்மனின் சூலம் மற்றும் பூஜை பொருட்களுடன் கோவிலிலிருந்து, ஆழியாற்றங்கரைக்கு சென்றனர். மயான பூஜை நடந்த இடத்தில், மாசாணியம்மனின் உருவம் சயன கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அருளாளி ஆற்றில், நீராடிவிட்டு தீர்த்தம் எடுத்து வந்தார். நள்ளிரவு, 1:00 மணிக்கு மேல் பம்பை, மேளதாளங்கள் முழங்க அம்மனின் உருவத்தை மறைத்து வைத்திருந்த திரை விலக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின், அருளாளி எடுத்து வந்த அம்மனின் தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. எலுமிச்சை மாலைகளால், அம்மனின் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிறகு பம்பைக்காரர்கள் பக்தி பாடல்களை பாடினர். அதிகாலை, 3:15 மணிக்கு அருளாளிக்கு அருள் வந்து அம்மன் மீது வைக்கப்பட்டிருந்த எலும்புத்துண்டை வாயில் கவ்விக் கொண்டு, கையில் சூலாயுதத்துடன் ஆவேசமாக நடனமாடினார். ஆடிக்கொண்டே அம்மன் உருவத்தை சிதைத்தார். அம்மன் உருவம் சிதைக்கும் போது, அம்மனின் பட்டு சேலையில் பிடிமண் எடுக்கப்பட்டது. அம்மனின் உருவம் சிதைக்கப்பட்ட பின், மயான பூஜை முடிந்தது. இந்நிகழ்வில், ஆனைமலை மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிலர் அருள் வந்து, ஆடினர். பக்தர்கள்,‘ அம்மா தாயே... மாசாணி தாயே...’ என பக்தர்கள் கோஷம் எழுப்பினர். பக்தர்கள் கூட்டத்தை போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணிக்கு ஆழியாற்றங்கரையில் கும்பஸ்தாபனம் நடந்தது. இதில், அம்மன் உருவத்தில் கழுத்துப்பகுதியிலிருந்த மண் எடுக்கப்பட்டு, சக்தி கும்பஸ்தாபனம் கலசத்துடன் கோவில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 6:30 மணிக்கு மகா பூஜையும் நடந்தது. இன்று காலை, 10:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் குண்டம் கட்டுதல், மாலை, 6:30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல் மற்றும் இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இவ்விழாவை தொடர்ந்து, நாளை (3ம்தேதி) குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.