பழநி தைப்பூச விழாவில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு
பழநி; பழநி தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிக அதிகரித்து கிரிவீதியில் அதிகாலை 2:00 மணி முதல் பக்தர்கள் திரண்டனர்
பழநி கோயில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை ஏராளமாக அதிகரித்து வருகிறது. நேற்று தைப்பூச தேரோட்டம் ரத வீதிகளில் நடந்தது. கிரி வீதியில் பால்காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, புஷ்பக் காவடி, தொட்டில் காவடி, கரும்பு காவடி, இளநீர் காவடி உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வந்தனர். மேளதாளங்களுடன் கும்மியாட்டம், கோலாட்டம், தேவராட்டம், காவடியாட்டம் ஆகிய ஆட்டங்களுடன் மேளதாளத்துடன் சுற்றி வந்தனர்.
கிரிவீதியில் அதிகாலை 2 மணி முதல் தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர் அரோகரா கோஷமும் முருகன் பாடல்களும் இசைத்தபடி பாதயாத்திரை பக்தர்கள் வருகை புரிந்தனர். குழுவாக கிரி வீதியில் பக்தர்கள் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிரிவலப் பாதையில் இருந்து தரிசன வரிசை மூலம் யானை பாதை வழியாக முருகன் கோயில் வர 6 மணி நேரம் மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். முருகன் கோயிலில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிரி வீதியில் இருந்த பக்தர்கள் கம்பி தடுப்புகளை தாண்டி மலைப்பகுதியில் குறுக்கு வழியாக ஆபத்தான முறையில் ஏறிச்சென்றனர். கோயில் பணியாளர்களை அவர்களை கட்டுப்படுத்தினர். திண்டுக்கல், தேனி,திருநெல்வேலி பகுதி எஸ்.பி.,க்கள் தலைமையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 3500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
பக்தர்கள் மயக்கம்: காலை 10:00 மணி அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் குடமுழுக்கு மண்டபம் அருகே மூன்று பின் பக்தர்கள் உட்பட 10 பேர் மயக்கம் அடைந்தனர். உடனடியாக கோயில் சார்பில் பக்தர்களுக்கு தண்ணீர் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. மயக்கமடைந்த பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கிரிவீதியில் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். தற்காலிக மருத்துவ முகாம்கள் மூலம் பக்தர்கள் மருத்துவ வசதி பெற்றனர்.
பழநியில் இருந்து வெளியூர் செல்லும் பக்தர்களுக்கு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டது. பழநியில் இருந்து செல்லும் அனைத்து பஸ்கள் அனைத்தும் பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தன. கோவை ஈரோடு மார்க்கமாக செல்லும் பஸ்கள் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் இடம் தெரியாமல் பக்தர்கள் அவதிப்பட்டனர். சண்முக நதி, பாலசமுத்திரம் ரோடு பைபாஸ் ரோடு உட்பட பழநி நகரின் முக்கிய வீதிகள் அனைத்திலும் சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன நிறுத்தும் பார்க்கிங் அனைத்தும் நிரம்பியிருந்தன. பாதயாத்திரை பக்தர்களுக்கு கிரிவீதி மற்றும் பழநி வரும் வழிநெடுங்கிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரு வீதியில் பக்தர்கள் வரிசை அமைக்கப்பட்டதால் அடிவாரம் பகுதியில் உள்ள மக்கள் சிரமம் இல்லாமல் வணிகம் செய்தனர்.