உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் தைப்பூச விழா: பழநி ஆண்டவருக்கு பாலாபிஷேகம்.. இரண்டு உற்ஸவர்கள் புறப்பாடு

திருப்பரங்குன்றம் தைப்பூச விழா: பழநி ஆண்டவருக்கு பாலாபிஷேகம்.. இரண்டு உற்ஸவர்கள் புறப்பாடு

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி, தெய்வானை புறப்பாடாகினர். மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழநி ஆண்டவருக்கு அபிஷேகங்கள் முடிந்து மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.


சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி, தெய்வானை எழுந்தருளினர். உற்ஸவர்களுக்கு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது. பழநி ஆண்டவருக்கு பாலாபிஷேகம்; சிவாச்சாரியார்கள் பூஜை பொருட்களுடன் உப கோயிலான மலை அடிவாரத்திலுள்ள பழநி ஆண்டவர் கோயிலுக்கு சென்றனர். அங்கு யாக பூஜை முடிந்து மூலவர் பழனி ஆண்டவருக்கு 100 லிட்டர் பால், சந்தனம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்பட 16வகை அபிஷேகங்கள் முடிந்து மலர் அலங்காரமானது. தீபாராதனைக்கு பின்பு பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டு முருகப்பெருமான் புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிழா காலங்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மட்டும் புறப்பாடாகி ரத வீதிகள், கிரிவீதியில் உலா நிகழ்ச்சி நடைபெறும். தைப்பூசத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி, தெய்வானை தனித்தனியாக ரத வீதிகளில் புறப்பாடகினர். இரண்டு உற்ஸவர்கள் புறப்பாடாவது ஆண்டுக்கு ஒரு முறை தைப்பூசத் தன்று மட்டுமே.


காவடிகள்: திருப்பரங்குன்றம், மதுரை சுற்றியுள்ள பக்தர்கள் பால், பன்னீர், இளநீர் காவடி எடுத்தும், முகத்தில் அழகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தைகளுடன் வந்த பெற்றோரில் பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளின் தலையில் கிரீடம் வைத்தும், கையில் வேல் கொடுத்தும் தூக்கி வந்தனர். பலர் குழந்தைகளுக்கு முருகன் வேடம் அணிந்து அழைத்து வந்தனர். இலவச தரிசனத்து செல்லும் பக்தர்களுக்கு ஒரு வரிசையும் கட்டண தரிசனம் பக்தர்களுக்கு தனி வரிசையும் அமைக்கப்பட்டு இருந்தது. 5 மணிநேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்: இலவச தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் கோயில் வாசல்முதல் மலைக்குப் பின்புறம் புதிய படிக்கட்டு வரை 2 கி.மீ., வரிசையில் நின்று 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கட்டண தரிசன பக்தர்கள் பஸ் ஸ்டாண்டு வரை வரிசையில் நான்குமணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக கோயில் நடை மதியம் ஒரு மணிக்கு சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் மதியம் கோயில் நடை சாத்தப்படவில்லை. காலை முதல் இரவு வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


குன்றத்தில் குவிந்த பக்தர்கள்: வழக்கமாக தைப்பூசத்தன்று பக்தர்கள் குன்றத்திற்கு குறைந்த அளவிலேயே வருவர். நேற்று தைப்பூசம், பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நீதிமன்ற தீர்ப்பு, தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழக மட்டுமின்றி இந்தியா முழுவதும் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் பேசு பொருளாக மாறி உள்ளதாலும் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஏராளமான பக்தர்கள் நேற்று மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என்ற எதிர்பார்ப்பிலும் திருப்பரங்குன்றம் வந்தனர். திருப்பரங்குன்றத்தில் எங்கு திரும்பினாலும் பக்தர்கள் குவிந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !