வெள்ளி ரிஷப வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய நாகநாதசுவாமி
பரமக்குடி; பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி சிறகிகோட்டை, மஞ்சகொல்லை வைகை ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடந்தது.
நயினார்கோவிலில் சவுந்தரநாயகி, நாகநாதசுவாமி அருள்பாலிக்கின்றனர். தைப்பூச தீர்த்தவாரி விழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு சுவாமி, அம்பாள் புறப்பட்டனர். 12 கி.மீ., தொலைவில் உள்ள அக்கிரமேசி கிராம எல்லை சிறகிகோட்டை, மஞ்சகொல்லை குணநதீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர். அபிஷேக ஆராதனைகளுக்கு பின் சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் அலங்காரமாகினர். அங்கிருந்து மதியம் 1:45 மணிக்கு பக்தர்கள் தோளில் சுமந்து புறப்பாடாகி வைகை ஆற்றில் இறங்கினர். தொடர்ந்து ஆற்றில் சுவாமி, அம்பாள் இறங்கிய பின் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அப்போது கிராம மக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகளை வீசி எறிந்து சமர்ப்பித்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. காய்கறிகளை அங்கிருந்த மக்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். வைகை ஆற்றில் தீர்த்த வாரி மண்டகப்படியில் சிவாச்சாரியார்கள் மகாதீபாராதனை காண்பித்தனர். பின்னர் சுவாமி புறப்பாடாகி சிறகிகோட்டை கோயில் மண்டபத்தில் அமர்ந்தனர். மாலை 5:00 மணிக்கு நயினார்கோவிலை நோக்கி சென்று திருக்கோயிலை அடைந்தனர். கேவலசை, மெய்யனேந்தல் கிராமத்தார் திருக்கண் அமைத்திருந்தினர். ஆங்காங்கே அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. பரமக்குடி டி.எஸ்.பி., ஜெபராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.