வடலூரில் தைப்பூச விழா கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் ஜோதி தரிசனம்
வடலூர்; வடலூரில், தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக நடந்தது ; பல லட்சம் பக்தர்கள் ஜோதி தரிசனம் கண்டனர்
கடலூர் மாவட்டம், வடலூரில், வள்ளலார் எனும் இராமலிங்க அடிகள் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும், தருமச்சாலை மூலம் சன்மார்க்க கருத்துக்கள் பரப்பப்படுகிறது. இங்கு நேற்று, 155ம் ஆண்டு ஜோதி தரிசன விழா கோலாகலமாக நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு முதல் கால ஜோதி தரிசனம், 7 திரைகள் விலக்கப்பட்டு பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு, "அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை" எனும் மகா மந்திர கோஷம் எழுப்பி, ஜோதி தரிசனம் கண்டனர். அதனை தொடர்ந்து காலை 10:00 மணி, மதியம் 1:00 மணி, இரவு 7:00 மற்றும், 10:00 மணி என, 5 காலங்களாக நடந்த ஜோதி தரிசனத்தில், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இன்று காலை, 6வது காலமாக 5:30 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட நிர்வாகம், வள்ளலார் தெய்வ நிலையம் சார்பில் செய்திருந்தனர். கடலூர் போலீஸ் எஸ்பி., ஜெயக்குமார் காலை 6:00 மணி ஜோதி தரிசனம் முதல் விழாவிற்கான ஏற்பாடுகளை நேரில் கண்காணிப்பு செய்தார். மேலும், 1700 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். வெளியூர்களில் இருந்து ஜோதி தரிசனம் காண வடலூர் வந்த பக்தர்கள், சத்திய ஞான சபை அடைவது சிரமமாக இருந்ததாக தெரிவித்தனர். காலை 10:00 மணி ஜோதி தரிசனத்தில் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார், என்.எல்.சி.ஐ.எல் சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.