மூணாறில் தைப்பூசத் திருவிழா; பெண்கள் வடம் பிடித்து சப்பரம் இழுத்தனர்
மூணாறு; மூணாறில் சுப்ரமணியசுவாமி கோயிலில் நடந்த தைப்பூசத் திருவிழாவில் அரோகரா கோஷத்துடன் பெண்கள் வடம் பிடித்து சப்பரம் இழுத்தனர்.
மூணாறில் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் தைப்பூசத் திருவிழா மட்டும் அனைத்து பழநி பாதயாத்திரை குழுவினரால் வெகு சிறப்பாக நடத்தப்படும். இந்தாண்டு தைப்பூசத் திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடந்தது. பழைய மூணாறில் உள்ள பார்வதியம்மன் கோயிலில் இருந்து காலை 7:00 மணிக்கு காவடியுடன் பால்குடம் எடுத்து வரப்பட்டு முருகனுக்கு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடந்தன. கோயிலில் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு கோயில் இருந்து உற்சவ மூர்த்தி முருகன், வள்ளி, தெய்வானை சமேதமாக சப்பரத்தில் வீதி உலாவுக்கு எழுந்தருளினார். இந்தாண்டு வழக்கத்தை விட அதிக பெண்கள் பெண்கள் வடம் இழுக்க அரோகரா கோஷத்துடன் கோயிலில் இருந்து புறப்பட்ட சப்பரம் கோலாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், மலைவாழ் மக்கள் ஆட்டம் உள்பட பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பழைய மூணாறில் பார்வதியம்மன் கோயிலுக்கு சென்று மாலையில் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். விழாக்கான ஏற்பாடுகளை அனைத்து பழநி பாதயாத்திரை குழு தலைவர் பெருமாள், பொது செயலாளர் கோபி, ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் செய்தனர்.