உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபுரந்தான் சிவன் கோவிலுக்கு நடராஜர் சிலை வருகை!

ஸ்ரீபுரந்தான் சிவன் கோவிலுக்கு நடராஜர் சிலை வருகை!

அரியலூர்: ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை, ஸ்ரீபுரந்தான் சிவன் கோவிலுக்கு, நேற்று கொண்டு வரப்பட்டது. கிராம மக்கள், சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இங்கிருந்த ஸ்வாமி, அம்பாள், விநாயகர், நடராஜர் உள்ளிட்ட, எட்டு ஐம்பொன் சிலைகள், கடந்த, 2008 மார்ச், 24ம் தேதி, கொள்ளையடிக்கப்பட்டது. சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திரகபூர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள மியூஸியத்தில் வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், புதுடில்லியில், இந்திய பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது.தொடர்ந்து, ஜெயங்கொண்டம் நீதிமன்ற உத்தரவுபடி, பாதுகாப்பு கருதி கும்பகோணத்தில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில், நடராஜர் சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, அதற்கான கும்பாபிஷேகம் வரும், 9ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, கும்பகோணம் சிலை பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலை, நேற்று பலத்த பாதுகாப்புடன் ஸ்ரீபுரந்தான் சிவன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.ஸ்ரீபுரந்தான் கிராம எல்லையில் திரண்ட பொதுமக்கள், நடராஜர் சிலைக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து, மேள தாளத்துடன் கோவிலுக்கு கொண்டு சென்றனர். எட்டு ஆண்டுகளுக்கு பின், அங்குள்ள சிவன் கோவிலில் வைத்து, நடராஜருக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !