கபாலீசுவரர் கோவில் ரூ.15 கோடி பாக்கி வசூல் எப்போது?
மயிலாப்பூர்: கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான மனைகள், வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து, 15 கோடி ரூபாய் வரை, வாடகைதாரர்கள் பாக்கி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள முறைப்படுத்தும் திட்டத்தில், பங்கேற்காதோர், டிச., 31ம் தேதிக்கு பின் வெளியேற்றப்படுவர் என, அறநிலைய துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமாக, மயிலாப்பூரில் பல்வேறு இடங்களில், வீடுகள், கடைகள் என 800க்கும் மேற்பட்ட அசையா சொத்துக்கள் உள்ளன. இவை வருவாய் ஈட்டும் நோக்கத்தில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
நிலுவை: தற்போதைய நிலவரப்படி, இந்த கட்டடங்களை பயன்படுத்துவோரில், 500க்கும் மேற்பட்ட வாடகைதாரர்கள், பல ஆண்டுகளாக கோவிலுக்கு வாடகை செலுத்தாமல் இருந்து வருகின்றனர். இதனால், கோவிலுக்கு, 15 கோடி ரூபாய் வரை வாடகை பாக்கி வசூலாக வேண்டியுள்ளது. வாடகை பாக்கியை வசூலிக்கவும், வாடகைதாரர்கள் குறித்த உண்மை நிலவரத்தை சேகரித்து ஆவணங்களில் சேர்க்கவும் முறைப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, அனைத்து வாடகைதாரர்கள், அறநிலைய துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், மயிலாப்பூரில் நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டம்: அதில், 200க்கும் மேற்பட்ட வாடகைதாரர்கள் பங்கேற்றனர். முறைப்படுத்தும் திட்டத்தில் பங்கேற்று நிலுவையை செலுத்தி பயன் பெறுவது குறித்து அதிகாரிகள் விளக்கினர்.இதன்படி, கடந்த பல ஆண்டுகளாக நிலுவை வைத்துள்ளோர், 15 மடங்கு வாடகையை நன்கொடையாகவும், 10 மாத வாடகையை முன்பணமாகவும் செலுத்தினால், இத்திட்டத்தில் பயன்பெறலாம். அவர்களது கணக்குகள் முறைப்படுத்தப்படும்.வரும், டிச., 31ம் தேதி வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும். அதற்கு பின்பும், நிலுவை செலுத்தாமல், பெயர் மாற்றம் செய்யாமல் உள்ளோர், அந்தந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவர்.இவ்வாறு, அறநிலைய துறை அதிகாரிகள், தெரிவித்தனர்.