உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமலையான் சேவைக்கே என் வாழ்க்கை அர்ப்பணம்: நகை பாதுகாவலர் டாலர் சேஷாத்திரி உருக்கம்!

ஏழுமலையான் சேவைக்கே என் வாழ்க்கை அர்ப்பணம்: நகை பாதுகாவலர் டாலர் சேஷாத்திரி உருக்கம்!

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு சேவை செய்து கொண்டே தன் இறுதி மூச்சை விட விரும்புகிறேன், என தேவஸ்தான நகை பாதுகாவலர் டாலர் சேஷாத்திரி, நேற்று, தெரிவித்தார். திருமலை ஏழுமலையானின் நகை பாதுகாவலராக பணியாற்றி வருபவர் டாலர் சேஷாத்திரி. திருமலையில், 2006ல், 5 கிராம் எடையில், 300 தங்க டாலர்கள் மாயமானது. இதில், தேவஸ்தான நகை பாதுகாவலர் டாலர் சேஷாத்திரி மற்றும் 2 தேவஸ்தான அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக, தகவல்கள் வெளியானது. தொடர்ந்து, டாலர் சேஷாத்திரியை, தேவஸ்தானம் நகை பாதுகாவலர் பதவியிலிருந்து விலக்கியது. மேலும், இந்த வழக்கை விசாரிக்க கோரி, ஆந்திர அரசு, மத்திய புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்தது. கடந்த, 2008ல், இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி, அது குறித்த முழு அறிக்கையை, மத்திய புலனாய்வுத்துறை, ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை மேல் உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில், தேவஸ்தான நகை பாதுகாவலர் பதவியை ஏற்றுக் கொள்ள யாரும் முன்வரவில்லை. இதையடுத்து, இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த பொறுப்பை, மீண்டும் டாலர் சேஷாத்திரியிடம், தேவஸ்தானம் ஒப்படைத்தது. இதுவரை, இந்த பதவியில் வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. மேலும், டாலர் சேஷாத்திரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், தற்போது, அந்த பதவியில் ஒருவரை தேவஸ்தானம் நியமித்துள்ளது. அவருக்கு டாலர் சேஷாத்திரி நகைகள் குறித்த விவரங்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம், ஐதராபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் மேல், இறுதி தீர்ப்பளித்தது. இதில், டாலர் சேஷாத்திரி நிரபராதி என்று தெரிய வந்துள்ளது. அதனால், அவர் தன் இறுதி மூச்சு உள்ளவரை, ஏழுமலையானுக்கு சேவை செய்ய விரும்புவதாக நேற்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !