உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் கோவிலுக்கு பாத யாத்திரை: மாலை அணிந்த 20 ஆயிரம் பக்தர்கள்!

சமயபுரம் கோவிலுக்கு பாத யாத்திரை: மாலை அணிந்த 20 ஆயிரம் பக்தர்கள்!

கும்பகோணம்: திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் கும்பகோணம் பகுதியிலிருந்து, ஆயிரக்கணக்கானோர் மாலை அணிந்து, விரதம் இருந்து பாதயாத்திரையாக சென்று, மாரியம்மனை தரிசித்து வருகின்றனர். உலக நன்மைக்காக, 22ம் ஆண்டு பாதயாத்திரையை, திருவலஞ்சுழி கோபாலகிருஷ்ண சுவாமிகள் தலைமையில் செல்லும் பக்தர்கள், திருவலஞ்சுழியில் குவிந்தனர். தொடந்து விருத்தாசலம், கும்பகோணம், பந்தநல்லூர், திருவிடைமருதூர், பாபநாசம், சுவாமிமலை, வலங்கைமான், குடவாசல், நன்னிலம் பகுதியில் இருந்து வந்த பக்தர்களுக்கு, கோபாலகிருஷ்ண சுவாமிகள் மாலை அணிவித்தார். மலேஷியாவிலிருந்து, 80 பேரும், கேரளாவிலிருந்து, 200 பேரும் முதன்முறையாக திருவலஞ்சுழிக்கு வந்து, பாதயாத்திரை செல்ல மாலை அணிந்து கொண்டனர். ஒரே நாளில், 20 ஆயிரம் பேர் மாலை அணிந்து கொண்டனர். மாலை அணிந்தவர்கள், டிசம்பர், 26ம் தேதி வரை விரதம் இருந்து, சமயபுரம் செல்ல உள்ளனர். இதையொட்டி திருவலஞ்சுழியில் உள்ள சமயபுரம் மாரியம்மனுக்கு தினமும் பல்வேறு அலங்காரம் செய்து, வழிபாடு நடத்தப்படும். அடுத்த மாதம், 26ம் தேதி அதிகாலை பாதயாத்திரை தொடங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !