திருப்பூர் பெருமாள் கும்பாபிஷேகம்: டிச., 1ல் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை!
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி, வாஸ்து பூஜை, யாகத்துடன் நேற்று துவங்கியது; விழா ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன. நகர்ப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும் 1ல் நடக்கிறது; நேற்று மாலை 5.00 மணிக்கு, ஸ்ரீவீரராகவப் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின், வாஸ்து சாந்தி பூஜை மற்றும் யாகம் நடந்தது. ஸ்ரீரங்கம் ராமன் பட்டர் தலைமையில், பட்டாச்சாரியார்கள் பூஜை, பாராயணங்கள் செய்தனர். இன்று காலை 7.30 மணிக்கு, யாக சாலை பிரவேசம், கும்பங்களில் எம்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களின் பிம்ப அக்னியாதி சதுஸ்தான பூஜைகள் நடக்கின்றன. வரும் டிச., 1ம் தேதி காலை 9.47 மணிக்கு, விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம், 10.22க்கு, மூலவர்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகம் காணசிறப்பு ஏற்பாடு:
* பெருமாள் கோவிலில் ராஜகோபுரத்துக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்வை காண விரும்புவோர், கோவிலின் முன்புறம் மற்றும் பெருமாள் கோவில் வீதியில் நிற்க வேண்டும்.
* மூலவர், தாயார் சன்னதி கோபுரங்கள் மற்றும் பரிவார சன்னதி கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்வுகளை பார்க்க விரும்பும் பக்தர்கள், காமராஜர் ரோடு மற்றும் அரிசி கடை வீதியில், தெற்கு கோபுரம் வரை நிற்கலாம். இங்கு, நெரிசலை தவிர்க்க ‘பேரி கார்டு’ அமைக்கப்படுகிறது.
* கும்பாபிஷேகம் முடித்து தரிசனம் செய்வதற்கு, அரிசி கடை வீதியில் 300 அடி நீளம்; 25 அடி அகலத்தில் பந்தல் அமைக்கப்படுகிறது. இது, 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் பக்தர்கள் அனுப்பி வைக்கப்படுவர். இவர்கள், தெற்கு பகுதியில் மூன்று வரிசைகளில், கோவி லுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். தரிசனம் முடிந்ததும், சொர்க்க வாசல் வழியாக வெளியே வர வேண்டும்.
* கும்பாபிஷேக புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்க, 20க்கும் மேற்பட்ட இடங்களில் ‘ஸ்பிரிங்லர்’ பொருத்தப்பட்டுள்ளன.
* தரிசனம் முடிந்ததும், கஜலட்சுமி தியேட்டர் ரோடு பகுதியில், இரண்டு இடங்களில் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ‘மொபைல் டாய்லெட்’டுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
* கோவிலுக்கு வரும் கார்கள், வளம் பாலத்துக்கு கிழக்குப்புறம் நொய்யல் கரைகளிலும்; கே.ஆர். சி., சிட்டி சென்டர் வளாகம், பழைய பஸ் டாண்ட் பகுதிகளிலும், ‘பார்க்கிங்’ செய்ய வேண்டும்.
* இரு சக்கர வாகனங்களை கஜலட்சுமி தியேட்டர், கே.எஸ்.சி., பள்ளி வளாகம் மற்றும் பழனியம்மாள் பள்ளி வளாகத்தில் நிறுத்த ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
* பூ மார்க்கெட் மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதியில், கடைகளின் முன்பிருந்த ரோட்டோர ஆக்கிரமிப்புகள் நேற்று மாநகராட்சியால் அகற்றப் பட்டன.பள்ளிகளுக்கு விடுமுறைமுதன்மை கல்வி அலுவலர் முருகனிடம் கேட்ட போது, “பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மாநகர பகுதிக்குள் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 1ம் தேதி <உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, பள்ளிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. புறநகரில் உள்ள பள்ளிகள், மாவட்டத்தின் இதர பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்,” என்றார்.
பூ மார்க்கெட் ‘லீவு’: கும்பாபிஷேகத்தையொட்டி, திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கும் விடுமுறை விடப்படுகிறது. நாளை (30ம் தேதி) மதியம் முதல், வ ரும் 1ம் தேதி முழுவதும், பூ மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்படும், என, தினசரி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.