புல்மேடு பாதையில் நடந்தே ஆய்வு செய்த கலெக்டர்!
சபரிமலை: தமிழ்நாட்டிலிருந்து அதிகமான பக்தர்கள் வரும் புல்மேடு பாதையை பத்தனந்திட்டை மாவட்ட கலெக்டர் நடந்தே சென்று ஆய்வு செய் தார். இந்த பாதையில் வருவோருக்கு குடிநீர் வசதி செய்ய உத்தரவிட்டார். சபரிமலை வரலாற்றில் புல்மேடு பாதையை பக்தர்களாலும், அதிகாரிகளாலும் மறக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்னர் மகரஜோதி தெரிந்த சில நிமிடங்களில், போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், சரிவில் பின்னோக்கி வந்த ஒரு ஜீப்பால் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து 100-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அதன் பின்னர் அப்பாதையில் மாவட்ட நிர்வாகமும், தேவசம்போர்டும் தனி கவனம் செலுத்துகிறது. இங்கு சீசனில் தடுப்புவேலிகளும், மின்விளக்குகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்தனந்திட்டை கலெக்டர் ஹரிகிஷோர், உதவி கலெக்டர் ஸ்ரீராம் வெங்கட்ராமன், இடுக்கி துணை கலெக்டர் ஜாபர்மாலிக் ஆகியோ ருடன் வண்டிபெரியாறிலிருந்து உப்புப்பாறை, சத்திரம், புல்மேடு, உரக்குழி, பாண்டித்தாவளம் வழியாக சன்னிதானத்துக்கு நடந்து வந்தார். இப் பாதையில் போதிய குடிநீர் வசதி இல்லாததை அறிந்த கலெக்டர் உடனடியாக ஏற்படுத்த உத்தரவிட்டார். நீலிமலைக்கும், கரிமலைக்கும் இடையில் மின்இணைப்பு கம்பி தாழ்வாக செல்வதை கண்டார். அதை உடனடியாக சரிசெய்ய மின்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கரிமலையில் பி.எஸ்.என்.எல்., ‘மொபைல் கவரேஜ்’ வசதிக்கும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.