சாமி கும்பிட சண்டை போடுவதா: நீதிபதிகள் வேதனை!
சென்னை: தன்னை வணங்குவதற்காக, பக்தர்கள் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என, எந்த சாமியும் கேட்பதில்லை; அமைதியாக வழிபட முடியவில்லை என்றால், அந்த கோவிலை மூடத் தான் வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில், ஆலுத்துார் காலனி உள்ளது. இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில், ஆலுத்துார் காலனியில் உள்ள, கங்கையம்மன் கோவிலுக்கு, ‘சீல்’ வைக்கப்பட்டது. பக்தர்கள் வழிபாடு நடத்த, கோவிலுக்கு வைக்கப்பட்ட, ‘சீல்’ அகற்றும்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சமன் என்பவர், மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: கோவில்களில் வழிபாடு நடத்துவதற்கும் கூட, சண்டை போட்டுக் கொண்டு, சமுதாயத்தில் பிரிவு ஏற்படுத்துவதை பார்க்கும் போது, எங்களுக்கு வருத்தமாக உள்ளது. இந்த கிராமத்தில், இரண்டு கங்கையம்மன் கோவில்கள் உள்ளன. இரண்டு குழுக்களுக்கு இடையில் நடக்கும் மோதல்களால், அமைதி குலைந்துள்ளது. ஒரு கோவிலுக்கு, ‘சீல்’ வைக்கப்பட்டு, மற்றொரு கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. ‘சீல்’ வைக்கப்பட்ட கோவில், மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. வழிபாட்டு உரிமையில் குறுக்கீடு செய்வதாக, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுவதை, ஏற்க முடியவில்லை. தன்னை வழிபடுவதற்காக, பக்தர்கள் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்று, எந்த கடவுளும் கேட்பதில்லை.அமைதியான முறையில், மக்களால் வழிபாடு நடத்த முடியவில்லை என்றால், அந்த கோவிலை மூட வேண்டியது தான்; அந்தப் பகுதி மக்களிடம் நல்ல உணர்வு வரும் வரையில், கோவிலை மூடும் முடிவை, நிர்வாகம் எடுத்தது சரிதான். இந்த மனுவை, பொதுநல மனுவாகக் கருத முடியாது; மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.