உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!

திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, தீப திருவிழாவினை முன்னிட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் எஸ்.பி., முத்தரசி வெளியிட்டுள்ள அறிக்கை: கார்த்திகை தீப திருவிழாவினை முன்னிட்டு, திருவண்ணாமலையில் ஒன்பது இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் சாலையில் ஊசாம்பாடியிலும், அவலூர் பேட்டை சாலையில் நூக்காம்பாடி காலனியிலும், திண்டிவனம் சாலையில் தானாமேடு சந்திப்பு, வேட்டவலம் சாலையில் ஏந்தல் கிராமத்திலும், திருக்கோயிலூர் சாலையில் தென்மாத்தூர் அன்பு நககரிலும், மணலூர் பேட்டை சாலையில் விக்னேஷ் பாலிடெக்னிக் அருகிலும், தண்டராம்பட்டு சாலையில் செட்டிப்பட்டு சந்திப்பு பகுதியிலும், செங்கம் சாலையில் ஒட்டக்குடிசல் கிராமத்திலும், காஞ்சி சாலையில் புனல்காடு சந்திப்பு சாலை அருகிலும், வாகன சோதணை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வரும், 5, 6 ஆகிய தேதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரிவலம் முடிந்து, தங்களது சொந்த ஊருக்கு செல்லும்போது, சென்னை செல்லும் தனியார் வாகனங்கள் ரிங்ரோடு வழியாக, போளூர், ஆரணி, ஆற்காடு வழியாக, சென்னைக்கு செல்ல வேண்டும். திண்டிவனம், புதுச்சேரி செல்லும் தனியார் வாகனங்கள், வேட்டவலம், விழுப்புரம் வழியாக செல்ல வேண்டும். சென்னை செல்லும் அரசு பஸ்கள் திருவண்ணாமலை ஒழுங்கு முறை விற்பனை கூடம் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் இருந்து, திண்டிவனம் வெளிவட்ட சாலை இடதுபுறமாக திரும்பி, அவலூர்பேட்டை, மேல்மலையனூர், வளத்தி, செஞ்சி வழியாக திண்டிவனம், புதுச்சேரி செல்ல வேண்டும். தீப திருவிழா முடியும் வரை, கனரக வாகனங்கள், திருவண்ணாமலை நகருக்குள் வர அனுமதி கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !