உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை தீபம்: விளக்கு விற்பனை ஜோர்!

கார்த்திகை தீபம்: விளக்கு விற்பனை ஜோர்!

திருப்பூர் : இன்று கார்த்திகை தீபத்திருநாள். அதனால், திருப்பூரில் விதவிதமான புது மாடல் விளக்குகளை, மக்கள் ஆவலுடன் வாங்கிச் சென்றனர். இந்துக்கள் பண்டிகையில், வழிபாட்டில் முதன்மையாக உள்ளவை தீபம் மற்றும் விளக்குகள். தீபாவளியும், திருக்கார்த்திகையும் தீபங்களுக்குரிய சிறப்பை விளக்குகின்றன. கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோவில்களில் மட்டுமின்றி வீடு, கடை, வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் இன்று தீபம் ஏற்றி வழிபாடு செய்வர்.களிமண்ணால் செய்யப்பட்ட சிறு தீபங்கள் தவிர, பல்வேறு வடிவங்களிலான தீபங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு ரூபாயில் இருந்து 1,500 ரூபாய்க்கும் மேல் விலையுள்ள மண்ணால் ஆன விளக்குகள் விற்பனையாகின்றன. புதிய வடிவங்களில் வந்துள்ள விளக்குகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.

விளக்கு வியாபாரி சங்கர் கூறியதாவது:மண்ணில் வண்ணப்பொடி கலக்கி உருவாக்கிய வண்ண விளக்குகள், குடையுடன் கூடிய லட்சுமி, விநாயகர் உருவங்கள் கொண்ட அடுக்கு விளக்குகள் அதிகளவில் விற்பனையாகின்றன. விளக்கின் அடிப்பாகம் வழியாக எண்ணெய் ஊற்றி, மேற்பகுதியில் திரி போடும் வகையில் மேஜிக் விளக்கும் வந்துள்ளது. 16 முதல் 57 விளக்கு கொண்ட அடுக்கு விளக்கும் உள்ளன. இவை, 300 முதல் 1,500 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் உள்ளன.இலை வடிவம், கணபதி வடிவம், யானை தலை மீது அமைந்த தீபம்; பூ உருளையுடன் கூடிய தீபங்களும் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு தருவிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் விளக்கு விற்பனை அதிகரித்து வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !