உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சஞ்சீவமலை கோவிலில் 1,008 தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு!

சஞ்சீவமலை கோவிலில் 1,008 தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு!

ஓமலூர்:ஓமலூர் அருகே, சஞ்சீவமலை திருக்கோவிலில், கார்த்திகை பரணியை முன்னிட்டு, மகா பரணி தீபம் மற்றும், 1,008 தீபங்கள் ஏற்றும் தீப திருவிழா நேற்று நடந்தது.ஓமலூர் அருகே, அரங்கனூர் கிராமத்தில், சஞ்சீவமலை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில். ஆண்டுதோறும், கார்த்திகை மாதம் பரணியில், பரணி தீபமும், 1,008 மகா தீபமும் ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டும், கார்த்திகை பரணியை முன்னிட்டு, கற்பக விருட்சத்தின் முன்பு பரணி தீபம் நேற்று ஏற்றப்பட்டது.பின்னர், அதனை சுற்றிலும், 1,008 மகா தீபங்கள் ஏற்றப்பட்டது. இதில், சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து வந்திருந்த, 700க்கும் மேற்பட்ட பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த நெய் மற்றும் நல்லெண்ணெய்யில் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர்.இதுகுறித்து, சஞ்சீவமலை திருத்தல சேவா சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பழங்கால தமிழர்கள், விருட்சத்தை வழிபட்டனர். மனிதர்களுக்கும், விருட்சங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும், நவக்கிரகங்களுக்கும் உள்ள தொடர்பினை அடைப்படையாகக் கொண்டு, இந்த திருத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பண்டைய தமிழர்களின் வழிபாட்டினை மீட்டெடுக்கும் வகையில், இக்கோவிலை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தோம். இதுபோன்ற கோவில், வேறெங்கும் அமைக்கவில்லை.இந்த திருத்தலத்தின் பிரதான விருட்சமான கற்பக விருட்சம் உள்ளது. இந்த விருட்சத்திடம் வேண்டினால், நினைத்தது நடக்கும். அடுத்தது சனிவிருட்சம், இந்த விருட்சத்திடம், தன்னிடமிருந்து எது நீங்க வேண்டும் என வேண்டுகிறோமோ அது நீங்கும். அதுபோல், 12 ராசிக்கான விருட்சங்கள் வைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இந்த விருட்சங்களை, அதற்கே உரிய முறையோடு வணங்கி வந்தால், கேட்கின்ற அனைத்து வரம்களும் கிடைக்கும்.கோவிலுக்கு பூசாரிகள் கிடையாது. அதேபோல், பக்தர்கள் தட்சணை கொடுக்க வேண்டியதில்லை, நுழைவுச் சீட்டு இல்லை, உண்டியல் இல்லை. அனைத்தும், தமிழர்களின் தொன்மையை மீட்டெடுக்கும் விதமாக, சஞ்சீவமலை திருத்தல சேவா சங்கம் நடத்தி வருகிறது.இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !