ஆண்டாள் யானைக்கு சிறப்பு நல்வாழ்வு முகாம் துவக்கம்!
சேலம் : சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும், மதுரை அழகர் கோவில் யானை ஆண்டாளுக்கு, சிறப்பு நல்வாழ்வு முகாமை, கலெக்டர் துவக்கி வைத்தார். தமிழக கோவில்கள், மடங்கள், வனத்துறையால் பராமரிக்கப்படும் யானைகள் பயன் பெறும் வகையில், ஆண்டுதோறும், யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு தேக்கம்பட்டி, பவானி ஆற்றில், வனப்பத்திரகாளியம்மன் கோவில் அருகில், இந்த முகாம் நடந்தது. இதில், 52 யானைகள் பங்கேற்றன. முகாமில் கலந்து கொள்ளாத, 11 கோவில் யானைகள், 37 வனத்துறை யானைகளுக்கு, அவற்றின் இருப்பிடத்துக்கே பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு கோவை, தேக்கம்பட்டி வனப்பத்திரகாளியம்மன் கோவிலில், நேற்று முகாம் துவங்கியது. இதில், 40க்கும் மேற்பட்ட யானைகள் கலந்து கொண்டன. இந்த ஆண்டு, 40க்கும் மேற்பட்ட யானைகள், முகாமில் கலந்து கொள்ளவில்லை. சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி, மதுரை அழகர் கோவில் யானை ஆண்டாள் ஆகியவையும் கலந்து கொள்ளவில்லை.
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், மதுரை அழகர் கோவில் யானை ஆண்டாள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கான நல்வாழ்வு முகாமை, மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் நேற்று துவக்கி வைத்தார். முகாம், ஜன., 27ம் தேதி வரை, 48 நாட்கள் நடக்கிறது.கால்நடை மருத்துவர்களை கொண்டு முழுமையான மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வனத்துறையினரால் உணவு வழங்கப்பட உள்ளது. தினமும், 20 கரும்பு, ஒன்பதரை கிலோ சோளத்தட்டு, எட்டு தென்னம்மட்டை, ஐந்து வாழைப்பழம், எட்டு வாழைத்தண்டு, 12 கிலோ கேழ்வரகு, நான்கு கிலோ கொள்ளு, இரண்டு கிலோ புழுங்கல் அரிசி, இரண்டு தேங்காய், 100 கிராம் உப்பு, 100 கிராம் வெல்லம் என்ற வகையில் உணவு வழங்கப்பட உள்ளது.இதேபோல், சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரிக்கும், நல்வாழ்வு முகாம் துவங்கப்பட்டது. குரும்பப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., செல்வராஜ், வன பாதுகாவலர் அருண், மாவட்ட வன அலுவலர் ஜெயபாலன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.