கிறிஸ்துமஸ் கால சிந்தனை- 1 பணிவாகப் பேசுங்கள்!
பதவி, அதிகாரத்தில் இருப்பவர்கள் அதற்கான தகுதி, திறமை இல்லாவிட்டாலும், தங்களை அறிவு மிக்கவர்களாக காட்டிக்கொள்வதில் கவனத்துடன் நடந்து கொள்வர். இவர்களை எதிர்கொள்ளும்போது எச்சரிக்கையுடன் வார்த்தைகளை உதிர்க்க வேண்டும்.
ஒருமுறை இயேசுகிறிஸ்து கோயிலில் அமர்ந்து வந்தவர்களுக்கு போதித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த தலைமை குருவும், அவரைச் சேர்ந்தவர்களும், அவரைப் பார்த்து "இங்கு அமர்ந்து போதிக்கும் அதிகாரத்தை உமக்கு வழங்கியது யார்?” என கோபத்துடன் கேட்டனர். அவர்களிடம் இயேசு, உங்களிடம் நானும் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் பதில் அளித்தால், நானும் பதில் கூறுகிறேன்,” என்றார்.
யோவான் என்ற இறைவாக்கினர், இயேசுவுக்கு முன்னதாக மக்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். சிறந்த போதனை வழங்கினார். யோவானின் செல்வாக்கு அதிகரித்ததால் அவரை ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
யோவானை நினைவுபடுத்திய இயேசு, "திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் அவருக்கு எங்கிருந்து வந்தது. விண்ணிலிருந்தா? அல்லது மனிதர்களிடமிருந்தா?” என கேட்டார். விண்ணிலிருந்து வந்தது என பதில் கூறினால், பின்னர் ஏன் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என இயேசு திருப்பி கேட்பார். மனிதர்களிடமிருந்து என பதில் கூறினால் மக்கள் வெகுண்டெழுவார்கள். ஏனெனில் அவர்கள் அனைவருமே யோவானை இறைவாக்கினர் என ஏற்றுக்கொண்டிருப்பவர்கள். தாங்கள் அளிக்கும் பதில் தங்களுக்கே பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த தலைமை குருவும், அவரோடு வந்தவர்களும் அங்கிருந்து வெளியேறினர்.
உறுதியான உள்ளமும், கர்வமில்லாத நடத்தையும், பணிவான பேச்சும் நம்மை உயர்ந்தவர்களாக பிறரிடம் பிரதிபலிக்கும்.