உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் மூலிகை ஓவியங்கள் புதுப்பிப்பு!

திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் மூலிகை ஓவியங்கள் புதுப்பிப்பு!

திருநெல்வேலி : திருப்புடைமருதூர் நாறும்பூநாதசுவாமி கோயிலில் பாரம்பரியமிக்க ஓவியங்களை புதுப்பிக்கும் பணியினை நேற்று அறநிலையத்துறை செயலர் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் நாறும்பூநாதசுவாமி கோயில் பிரசித்தி பெற்றதாகும்.கோயில் கோபுரத்தில் ஒவ்வொரு தளங்களிலும் உட்புறங்களில் மூலிகைகளால் வரையப்பட்ட நுட்பமான ஓவியங்கள் உள்ளன. பழமையான இந்த ஓவியங்களை பாதுகாக்க தமிழக முன்னாள் முதல்வர் ஜெ., ஒரு கோடியே 42 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

குற்றாலம் சித்திரசபையில் உள்ள மூலிகை ஓவியங்கள் புதுப்பிக்கப்பட்டது போல இங்குள்ள ஓவியங்களையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக கோபுரத்தின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும், ஐந்துநிலைகளிலும் உள்ள தளங்கள் சாதாரணமாக பலகைகளால் வேயப்பட்டு காரைப்பூசப்பட்டிருந்தது. மழையினால் அவை பாதிப்படைந்ததால், சுட்ட சுண்ணாம்பு, கடுக்காய்,கருப்பட்டி ஆகியவற்றை கொண்டு, தமிழக பாரம்பரிய முறையில் தளம் அமைக்கும்பணி நடந்தது. இதனை அறநிலையத்துறை செயலர் கண்ணன், தொல்லியல் ஆய்வாளர் நரசிம்மன், நெல்லையப்பர் கோயில் நிர்வாக அதிகாரி யக்ஞநாராயணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். தொடர்ந்து மூலிகைஓவியங்களை மெருகூட்டவும், மரச்சிற்பங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !