திருவண்ணாமலை கார்த்திகை தீப உண்டியல் காணிக்கை ரூ.1.63 கோடி!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப உண்டியல் காணிக்கை ஒரு கோடியே, 63 லட்சம் ரூபாய் வசூலானது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஒவ்வொரு மாதமும், பவுர்ணமி முடிந்து, உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கார்த்திகை தீப உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது. கடந்த, 12ம் தேதி, முதற்கட்டமாக உண்டியல் எண்ணப்பட்டபோது, 84 லட்சத்து, 26 ஆயிரத்து, 185 ரூபாய் ரொக்கம், 69 கிராம் தங்கம், 589 கிராம் வெள்ளி, ஆகியவை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.நேற்று முன்தினம், நிரந்தரமாக வைக்கப்படும் உண்டியல்கள், இரண்டாம் கட்டமாக எண்ணப்பட்டது. இதில், உண்டியல் காணிக்கையாக, 78 லட்சத்து, 81 ஆயிரத்து, 194 ரூபாய், 200 கிராம் தங்கம், 360 கிராம் வெள்ளியும் கிடைத்தது.கடந்த ஆண்டு தீப உண்டியல் காணிக்கையாக, ஒரு கோடியே ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 610 ரூபாய் வசூலானது. இந்த ஆண்டு ஒரு கோடியே, 63 லட்சத்து, 7,379 ரூபாய் வசூலானது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 61 லட்சத்து, 86 ஆயிரத்து, 769 ரூபாய் கூடுதலாக வசூலானது குறிப்பிடத்தக்கது.