உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ராஜகோபுரம் அமைக்கும் பணி மும்முரம்!

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ராஜகோபுரம் அமைக்கும் பணி மும்முரம்!

பெரியகுளம் : பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது. அடுத்தாண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என திருப்பணிக்குழுவினர் தெரிவித்தனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் சைவம் வளர்த்த தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில். வராகநதியின் தென்கரையில் அமைந்துள்ளது. சோழமன்னான ராஜேந்திரசோழானால் 10 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. கோயிலில் கட்டட அமைப்பில் எந்த கோயிலிலும் இல்லாதபடி, சுப்பிரமணியர், ராஜேந்திரசோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி ஆகிய சன்னதிகளும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. ஒவ்வொரு சன்னதிக்கும் ஒரு கொடிமரமாக மூன்று கொடி மரங்கள் உள்ளன. உத்திரபிரதேச மாநிலம் காசிக்கு அடுத்தாற் போல், பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வராகநதி கரையோரங்களில் எதிர், எதிராக ஆண்மருதமரம், பெண்மருதமரம் அமைந்துள்ளது. இதன் நடுவில் குளிப்பவர்களுக்கு சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். திருவிளையாடல் புராணத்தில் பன்றிகளுக்கு மோட்சம் கொடுத்த இடம் இத்திருத்தலம் இதனை விளக்கும் வகையில் அரிய சிற்பங்கள், சுப்பிரமணியர் சன்னதியில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோயில் தென்வடல் 191 அடியும் கிழமேல் 222 அடியும் கொண்ட பரந்த இப்பெருங்கோயிலில் அதிகார நந்தி சன்னதி துவங்கி சண்டிகேஸ்வரர் சன்னதி வரை 27 சன்னதிகளும் மண்டபங்களும் உள்ளன.

ராஜகோபுரம் கட்டும் பணி துவக்கம்: கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கும் இந்து அறநிலையத்துறை சார்பில் இரண்டு கோடிசெலவில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. கோயிலுக்குள் புதிதாக கன்னிமூல கணபதி சன்னதி, வெளிபிரகாரம், வாகனமண்டபம், சுற்றுச்சுவர், சன்னதிகளில் புதிய தளம், தூண்களை புதுப்பித்தல், தரைத்தளம் புதுப்பித்தல் பணிகளுக்கு கூடுதலாக இரண்டு கோடியும், திருப்பணிக்குழு உறுப்பினர்கள், ஆன்மிக பக்தர்கள் பங்களிப்புடன் நிதி ஏற்பாடு செய்யப்பட்டு ஒன்றரையாண்டாக ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.

சிலைகள் மாற்றியமைக்க பாலாய பூஜை: கோயிலில் கன்னிமூல கணபதியை பக்தர்கள் சுற்றிவருவதற்கு ஏதுவாக, விசாலமாக கட்டுவதற்கும், சுற்று பிரகாரங்களில் சரஸ்வதி, லட்சுமி மற்றும் பைரவர் சுவாமி சிலைகளின் மண்டபங்களை புதுப்பிப்பதற்காக, அந்த பகுதிகள் திரையிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் புதிததாக மண்டபம் கட்டுவதற்காக யாகசாலை பூஜை மற்றும் பாலாயம் பூஜை நடந்தது. தற்போது ராஜகோபுரம் அமைக்கும் பணியில் 16 வது வரிசை அதிர்ஷ்டானம் பட்டியல் வரி வேலை நடந்து வருகிறது. 10 மாதங்களில் ராஜகோபுரம் கட்டுமானப்பணி முடிவடையும் என திருப்பணிக்குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !