உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ஜூனனுக்கு இணையாக கர்ணன் சாகஸம்; ஆர்.பி.வி.எஸ்., மணியன் சொற்பொழிவு!

அர்ஜூனனுக்கு இணையாக கர்ணன் சாகஸம்; ஆர்.பி.வி.எஸ்., மணியன் சொற்பொழிவு!

திருச்செங்கோடு : திருச்செங்கோடு, அக்ரஹாரம் வீதியில் அமைந்துள்ள, சஞ்சீவராய பெருமாள் கோவிலில், ஹனுமந் ஜெயந்தி மஹோத்சவம் விழாவை முன்னிட்டு, சென்னை ஆர்.பி.வி.எஸ். மணியனின், மஹாபாரத தொடர் சொற்பொழிவு நடக்கிறது.

ஆர்.பி.வி.எஸ். மணியன் சொற்பொழிவில் கூறியதாவது: பாண்டவர்களும், துரியோதனாதியர்களும் ஆயுதப்பயிற்சியில் பெற்றிருந்த திறமையை, அரச குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் முன் வெளிக்காட்டுவதற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. யுதிஷ்டிரர், துரியோதனன், பீமன், அர்ஜூனன் ஆகியோர் தங்கள் திறமையை வெளிக்காட்டினர். அர்ஜூனன் நிகழ்த்திக் காட்டிய அற்புத சாகஸங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவனுக்கு நிகரான வீரன் ஒருவன் இவ்வுலகில் எங்கும் இருக்க முடியாது என, பொதுமக்கள் ஏகோபித்து கோஷம் எழுப்பினர்.அந்த நேரத்தில், அந்த அரங்கத்துக்குள் மார்பில் கவசமும், செவிகளில் குண்டலங்களும் அணிந்திருந்தவன் வந்தான். அவன், தனது சாகஸ செயல்களை செய்து காண்பிக்க, துரோணர் அனுமதி அளித்தார். அவன், அர்ஜூனன் செய்த எல்லா வீரதீர சாகஸ செயல்களையும் செய்து காட்டினான்.அந்த இளைஞன், தன்னை கர்ணன் என அறிமுகம் செய்து கொண்டான். கர்ணனது வீரதீர செயல்களை மக்கள் வெகுவாக பாராட்டி புகழ்ந்தனர். கர்ணன், அர்ஜூனனை விட சிறந்த வீரன் என்பதில் சந்தேகமே இல்லை என்றும் வெளிப்படையாக பாராட்டினர். அர்ஜூனனுக்கு இது அவமானமாக தெரிந்தது.அர்ஜூனன், தன்னோடு நேருக்கு நேர் நின்று போரிட வேண்டும் என, தன் கோரிக்கையை துரோணர் முன்னால் கர்ணன் வைத்தான். அந்த சவாலை எதிர்கொள்ள துணிந்தான் அர்ஜூனன். அர்ஜூனனுக்கும், கர்ணனுக்கும் இடையே போர் நடப்பதை தடுக்க, கிருபர் வழித்தேடத் துவங்கினார். "கர்ணா, தனக்கு சமமாக உள்ள ராஜகுமார்களுடன்தான் அர்ஜூனன் போரிடுவான். உன் குடும்ப பின்னணியை நீ கூற வேண்டும் என்றார் கிருபர். அதை கேட்ட கர்ணனின் முகம், மழையில் நனைந்த தாமரையாக மாறியது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !