கிறிஸ்துமஸ் கால சிந்தனை: அன்பால் இணைவோம்
கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற மனநிலையில், பழிவாங்கும் குணத்துடன் சிலர் உள்ளனர். இயல்பாக இருப்பது போல தோன்றினாலும், உள்ளுக்குள் பிறரைக் கவிழ்ப்பதை பற்றியே நினைத்துக்கொண்டிருப்பர். இதனால் தேவையில்லாத பகையும்,வேதனையும் வருமே தவிர, எந்த நன்மையும் ஏற்படாது. மனித மாண்புகள் குறுகிய வட்டத்திற்குள் முடங்கிவிடக்கூடாது. தீமை செய்பவர்களுக்குக் கூட நாம் நன்மை செய்யும் போது பகையுணர்வும், பழிவாங்கும் சிந்தனையும் ஒழிந்து விடும். இயேசு கிறிஸ்து தனது சீடர்களிடம், "தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக உங்களின் வலது கன்னத்தில் அறைந்தவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்,”என்றார். அன்பினால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. கொடூர மனம் படைத்தவர்களாக இருந்தாலும், அவர்களை எதிர்க்க துணியாமல் அவர்களின் துன்புறுத்தலை ஒருவர் புன்னகையோடு ஏற்றுக் கொள்ளும்போது எதிராளியின் மனநிலையில் மாற்றம் ஏற்படும். அவர் தனது செயலை நினைத்து வருந்தி, அதைத் திரும்பச் செய்யாமல் இருக்க முடிவெடுப்பார். இறையாட்சி என்பது இப்படித்தான் மலர வேண்டும். அன்பினால் ஒருவரை ஒருவர் ஆட்கொள்ள வேண்டும். திருச்சபையின் சட்டதிட்டங்களை முழுமையாக கடைபிடிப்பதும், திருப்பலி வழிபாட்டில் கலந்து கொள்வதும் மட்டும் இறையாட்சியாகாது. தன்னடக்கம், தூய்மை, இரக்கம், தாராள மனப்பான்மை, நேர்மை போன்ற உன்னதமான குணநலன்களுடன் வாழும் வாழ்க்கையே இறையாட்சியாகும்.