குலத் தொழிலுக்கு மரியாதை செலுத்திய தோடரின மக்கள்!
ஊட்டி: தோடர் இன மக்கள், தங்களின் குலத் தொழிலான கால்நடை வளர்ப்புக்கு மரியாதை செலுத்தும் வகையிலான விழாவை கொண்டாடினர்.
நீலகிரியில் வாழும் தோடரின மக்கள், இயற்கைகளை தெய்வதாக வழிபட்டு வருகின்றனர். இதில், வளர்ப்பு எருமைகளுக்கு முக்கியம் அளித்தும் வருகின்றனர். ஆண்டுதோறும் கால்நடை வளர்ப்புக்கு மரியாதை செலுத்தும் விதத்தில், எருமைகளுக்கு உப்பு ஊற்றும் விழாவை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி அருகே தலைக்குந்தா அருகே முத்தநாடுமந்துவில், தோடர் இன மக்கள், நடப்பாண்டுக்கான ‘உப்ஹட்டித்’ (உப்பு ஊற்றுதல்) என்ற பண்டிகை கொண்டாடினர். அதில், தங்கள் பகுதியில் உள்ள, இரு கோவில்களில் உள்ள கோவில் எருமை மற்றும் வளர்ப்பு எருமைகளுக்கு, உப்பு தண்ணீர் கொடுத்து, பிரார்த்தனை நடத்தினர். தங்களின் பாரம்பரிய இசைக் கருவிகளுடன், ஆடல், பாடல் என, உற்சாகமாக விழாவை கொண்டாடிய அவர்கள், வெண்ணெய் சாதம் தயாரித்து, எருமைகளுக்கு வழங்கி, பின் தாங்களும் உண்டு மகிழ்ந்தனர். இதனை திரளான சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் கண்டு ரசித்தனர்.