வடாரண்யேஸ்வரர் கோவிலில் 4ம் தேதி ஆருத்ரா!
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், ஜன., 4ம் தேதி இரவு, ஆருத்ரா அபிஷேகமும், 5ம் தேதி அதிகாலை ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.
ஆருத்ரா தரிசனம்: திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவில், சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதல் சபையாகும். ரத்தினசபை என்றழைக்கப்படும் இக்கோவிலில், மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதையே, ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், 2015ம் ஆண்டின் ஆருத்ரா விழா, ஜன., 4ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி, அன்று காலை 9:00 மணிக்கு, உற்சவர் சோமாஸ்கந்தர், வண்டார் குழலியம்மன் சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாகத்தில் இருந்து திருவாலங்காடு மற்றும் பழையனூர் பகுதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு, ரத்தின சபாபதி பெருமான் (நடராஜ பெருமான்), ஸ்தல விருட்சத்தின் கீழ், புதிதாக நிர்மாணித்துள்ள, ஆருத்ரா அபிஷேக மண்டபத்தில் எழுந்தருள்வார். பின், விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா அபிஷேகம் விழா துவங்கி, கதம்ப தூள், நெல்லி பொடி, வில்வ பொடி, சாத்துக்குடி, வாழை, பஞ்சாமிர்தம், பால், தேன், சொர்ணாபிஷேகம், கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி என, மொத்தம், 52 வகையான அபிஷேகங்கள் நடக்க இருக்கின்றன. ஜன., 5ம் தேதி, அதிகாலை 4:30 மணிக்கு, தீபாராதனை, மற்றும் கோபுர தரிசனம் நடைபெறுகிறது.
ஒரு லட்சம் பக்தர்கள்: இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம், சித்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.